Tamil News
Home செய்திகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது – சரத் வீரசேகர குற்றச்சாட்டு

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது – சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ளஅறிக்கை ஒருதலைப்பட்சமானது. தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இல்லாத பிரச்னைகளை இருப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் சர்வதேச அரங்கில் இலாபமடைகிறார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா. ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை நாட்டின் சுயாதீனத் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் ஒருதலைப்பட்சமான கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகின்றது.

தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணித்துச் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. 2019ஆம் ஆண்டு ஆட்சியமைத்த இந்த அரசாங்கம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படவில்லை. அனைத்து இன மக்களுக்கும் அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் இனநல்லிணக்கம் என்று செய்த தவறுகளை திருத்தும் போது அதனை இன புறக்கணிப்பு என்று கருதுவது தவறான நிலைப்பாடாகும்.

30 வருட கால சிவில் யுத்தம் முடிவடைந்த பிறகு அரசாஙகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தியது. இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை, மீறல் இடம் பெற்றன எனக் குற்றம்சாட்டப்பட்டன. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணை நடவடிக்கைகள் அக்கால கட்டத்தில் உள்ளகப் பொறிமுறை மூலம் முன்னெடுக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.ஆட்சி மாற்றத்துக்கு மேற்குலக நாடுகள் பாரிய பங்களிப்பு செய்தன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக 30/1 பிரேரணை கொண்டுவரப்பட்டது. 30/1 பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட பலவிடயங்கள் இலங்கையின் அரசமைப்புக்கும், சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்தும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக தனது தனிப்பட்ட விருப்பத்தை அரசாங்கத்தின் தீர்மானமாகத் தெரிவித்தார். இதன் தாக்கம் இன்றும் தொடர்கின்றது” என்றார்.

Exit mobile version