மதரஸா பாடசாலைகள் மூடல் விவகாரம்- நான் அவ்வாறு கூறவே இல்லை – அமைச்சர் சரத் வீரசேகர

இலங்கையில் உள்ள அனைத்து மதரஸா பாடசாலைகள் மூடப்படும் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, நாடாளுமன்றத்தில்  கருத்து தெரிவிக்கையில்,

“5 வயது முதல் 16 வயது வரையான அனைத்து சிறார்களும், இன, மத வேறுபாடின்றி, கல்வி நடவடிக்கைகளை தொடர வேண்டும். இந்த சிறார்கள், நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தேசிய கல்வி கொள்கைக்கு அமைய, தமது கல்வி நடவடிக்கைககளை தொடர வேண்டும். அதன்படி, தேசிய கல்வி கொள்கைக்கு அமைய முன்னெடுக்கப்படும் மதரஸா பாடசாலைகளை தடை செய்யப் போவதில்லை. எனினும், தேசிய கல்வி கொள்கைக்கு முரணாக, மதம் மற்றும் மொழிகளை மாத்திரம் கற்பிக்கும் மதரஸா பாடசாலைகளையே தடை செய்ய போவதாக தான் கூறியதாக சரத் வீரசேகர தெரிவித்தார். முஸ்லிம் சமூகம் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களிடமிருந்து தமக்கு அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

இதேவேளை, முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டு, அதனை அமைச்சரவை நிகழ்ச்சி நிரலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக சரத் வீரசேகர கூறினார்.