மணற்கொள்கைக்கு எதிராக போராடியவர்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் அடாவடி

கிளிநொச்சி மாவட்டம் பளைப் பிரதேசத்தில் மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெண்களை பளைப் பொலிசார் தாக்கியதோடு அவர்களின் தலைமுடியைப் பிடித்து தள்ளியும் விட்டுள்ளனர்.

மணல் அகழ்வு மேற்கொள்பவர்களை ஊக்குவிக்கும் முகமாக தற்போதைய அரசாங்கம் அவர்களிற்கான வழி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்திருந்தது. இந்த செயலை பல சமூக ஆர்வலர்கள் எதிர்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவுகள் தொடர்பாக தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரான பொ.ஐங்கரநேசன் அவர்கள் ஊடகங்களுக்கு ஓர் அறிக்கையையும் வழங்கியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பளைப் பொலிசாரின் இந்தச் செயலானது, மணற்கொள்ளையில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கும் செயலாகவே கருதுவதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன் இந்த நடவடிக்கை இப்படியே தொடருமானால், தமது பகுதி வெகுவிரைவில் அழிந்து விடும் எனவும் அந்தப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

ஜனநாயக ரீதியில் போராடிய மக்கள் மீது பொலிசார் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் செய்ததானது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு மாற்றுத் திறனாளி எனவும், அவரையே பொலிசார் தள்ளி வீழ்த்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.