மட்டு-பொது நூலகக் கட்டிட பணிகள் மீள ஆரம்பம்: புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்து

இடைநடுவில் கைவிடப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளன.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது  மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் இடைநடுவில் கைவிடப்பட்ட விடப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டடத்தை பூர்த்தி செய்வதற்கான தேசிய கொள்கை திட்டமிடல் அதிகாரசபை, திரைசேரி மற்றும் அமைச்சரவை என்பவற்றின் அனுமதிகள் பெறப்பட்டு தற்போது மீள கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

DSC 0047 மட்டு-பொது நூலகக் கட்டிட பணிகள் மீள ஆரம்பம்: புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்து

இதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தின் ஊடாக கேள்வி கோரப்பட்டதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்தினருக்கு குறித்த நிர்மானப் பணிகளுக்காக பொதுநூலக வளாகமானது கையாளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல், கட்டிடங்கள் திணைக்களத்தின் பிரதம நிறைவேற்று பொறியியலாளர் எந்திரி கே.இளங்கோ, மாவட்ட பொறியியலாளர் எந்திரி எம்.ஜே.எம்.நுஷ்கி, திட்ட பொறியியலாளர் எந்திரி எஸ்.மயூரன் மற்றும் ஃபோகஸ் மார்க்கெட்டிங் தனியார் நிறுவனத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

DSC 0073 மட்டு-பொது நூலகக் கட்டிட பணிகள் மீள ஆரம்பம்: புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்து

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பிக்கப்பட்ட இந்நூலகத்தின் பணிகள் இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆண்டு மாநகர சபையின் ஆட்சிப் பொறுப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையேற்றதை தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் துணையுடன் குறிப்பாக தேசிய கொள்கை திட்டமிடல் அதிகாரசபை, திரைசேரி மற்றும் அமைச்சரவை எனபவற்றின் அனுமதிகளும், நிதி ஒதுக்கீடுகளும் பெறப்பட்ட நிலையில் ஒப்பந்ததாரருக்கான அமைச்சரவை அனுமதி தாமதமாகியமையால் புதிய ஆட்சி மாற்றத்தின் பின் கடந்தவாரம் அவ் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் இதன்போது கருத்து தெரிவித்தார்.

DSC 0052 மட்டு-பொது நூலகக் கட்டிட பணிகள் மீள ஆரம்பம்: புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்து

மேலும் முழுமையாக 345 மில்லியன்கள் மதிப்பிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் முதல்கட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதை முழுமையாக கண்காணித்து அமுல்படுத்தும் நிறுவனமான தேசிய கட்டடங்கள் திணைக்களம் அந்த கட்டிட வேலைகளை எங்களுக்கு முறையாக முடிவுறுத்தி தருவார்கள் என்ற நம்பிக்கையும் தமக்கு உள்ளாதாகவும் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் நீண்ட நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த நூலகத்தின் பணிகளை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கட்டிடங்கள் திணைக்களம் மற்றும் ஒப்பந்ததாரருடன் தாம் கைச்சாத்திட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாநகர சபையின் வரலாற்றில் ஒரு மகிழ்ச்சிக்குரிய நாளாகவும் இந்த நாள் பதிவாகியுள்ளதாகவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.