Home செய்திகள் மட்டக்களப்பு மாநகரசபை, வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாநகரசபை, வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்கள் மூடப்படும் என்பதுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் இந்த நடைமுறை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகாரசபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா அச்சுறுத்தலை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்  தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தின் தொற்றியல் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் குணநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றினை தடுப்பது தொடர்பான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டது.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வந்து மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவது மற்றும் அப்பகுதிகளில் இருந்து வரும் மக்களை கட்டுபடுத்துவது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

IMG 4293 மட்டக்களப்பு மாநகரசபை, வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை

காத்தான்குடி பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கிருந்து வரும் வர்த்தகர்களை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை கொண்டவர்கள் அங்கே தங்கியிருந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப்பது எனவும் தங்குமிட வசதிகள் இல்லாதவர்களை மாநகரத்திற்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தற்காலிமாக தவிர்த்துக்கொள்வது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. வீதியோர வியாபாரங்களை முற்றாக நிறுத்துவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

காத்தான் குடியில் இருந்துவரும் வர்த்தகர்கள் தங்கக்கூடிய வர்த்தக நிலையங்களை மட்டும் திறக்க வேண்டும் எனவும் காத்தான்குடிக்குள் இருந்துவரும் ஊழியர்களை இடைநிறுத்திவிட்டு நகருக்கள் இருப்பவர்களைக்கொண்டு வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக இதன்போது மாநகர முதல்வர் தெரிவித்தார்.

வர்த்தக சங்கம் இதற்கான பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். இங்கு தங்குபவர்களுக்கு சுகாதார வசதிகளுடன் வசதிகள் ஏற்படுத்தப் பட வேண்டும். அது தொடர்பில் இன்று மாலைக்குள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் களவிஜயம் செய்து உறுதிப்படுத்தியதன் பின்னர் அவரது வியாபார செயற்பாடுகளுக்கு மாநகரசபை அனுமதி வழங்கும். இது தொடர்பான அறிவித்தல்கள் இன்று ஒலிபெருக்கி மூலம் செய்யப்படும். சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடப்பதன் மூலம் பொதுமக்கள் இந்த தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Exit mobile version