மட்டக்களப்பு – பாலியல் இலஞ்சம் பெற முயற்சிக்கும் அரச அதிகாரிகள்

தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் அரச அதிகாரிகள் சிலர்  பெண்கள் மீது பாலியல் சீண்டல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது  குறித்து மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பெண்னொருவரின் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றிய வில்வரெட்னம் கடந்த திங்கட்கிழமை உடனடி இடமாற்றமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக தற்காலிகமாக கிரான் பிரதேச செயலாளர் இணைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பிரதேச செயலாளர் அனுமதிப்பத்திரம் ஒன்றைப்பெறச்சென்ற பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியிருந்ததாக குறித்த பெண் வெளியிட்ட தகவல்களும் குறித்த பெண்ணிடம் பிரதேச செயலாளர் உரையாடிய குறுஞ்செய்தி உரையாடல்களும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன.

இது தொடர்பில் குறித்த பெண்ணால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,பொதுநிர்வாக திணைக்களம்,ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றிற்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் பொதுநிர்வாக அமைச்சின் அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து குறித்த பெண் உட்பட மூவரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த பிரதேச செயலாளரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பதற்கான தேவையிருப்பதாக கருதப்பட்டு அவரை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவரும் இதனை உறுதிப்படுத்தினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மண் கொள்ளைகளில் பிரதான சூத்திரதாரியாகவும் இவர் இருந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.