மட்டக்களப்பில் நாளை இடம்பெறும் பேரணிக்கு அழைப்பு

மட்டக்களப்பில் நாளை வெள்ளிக்கிழமை மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியொன்றை நடாத்த வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைத்தலைவி மதனா பாலகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

நாளை 30 ஆம் திகதி சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இந்த பேரணியை நடாத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,கல்லடியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நாளை காலை 8.00மணிக்கு கல்லடி பாலத்தில் இருந்து இந்த பேரணி ஆரம்பமாகி காந்தி பூங்காவரையில் சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 10வருடமாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டங்களை நடாத்திவரும் நிலையில் இதுவரையில் அவர்களுக்கு எந்தவிதமான தீர்வும் கிட்டாத நிலையே இருந்துவருவதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைத்தலைவி மதனா பாலகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

காணாமல்போனோருக்கான நீதியானது சர்வதேச விசாரணைகள் மூலமே பெற்றுக்கொள்ளமுடியும்.கலப்பு பொறிமுறைமூலம் எங்களுக்கான எந்த நீதியையும் பெற்றுக்கொள்ளமுடியாது.அதேபோன்று மாவட்டம் தோறும் காணாமல்ஆக்கப்பட்டோரை கண்டறியும் அலுவலகம் திறக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கின்றோம்.

எமது இந்த போராட்டம் வெற்றிபெறவேண்டுமானால் சகல அரசசார்பற்ற நிறுவனங்களும் வர்த்தக சங்கங்களும்ääபல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் தலைவர்கள்,பொதுமக்கள்,ஆட்டோ சங்கங்கள்,விளையாட்டு,இளைஞர் கழகங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் கிழக்கு மாகாணத்திலும் அதிகளவான மக்கள் காணப்படுகின்றனர்.இதேபோன்று கல்முனையிலும் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் பேரணி நடைபெறவுள்ளது.

வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் தளர்ந்த நிலையிலும் போக்குவரத்துகள் செய்யமுடியாத நிலையிலும் உள்ளனர்.அவர்களை கருத்தில்கொண்டே மட்டக்களப்பில் இந்த போராட்டத்தினை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 10வருடத்திற்கும் மேலாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தினை நடாத்திவரும் நிலையில் இந்த அரசாங்கம் பாராமுகமாகவே இருந்துவருவதாகவும் இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைக்கூட தெரிவிக்க அரசாங்கம் பின்னடித்துவரும் நிலையில் இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்த காரணத்தினால் சர்வதேசத்தினை நோக்கி தாங்கள் நிற்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் இன்று பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் நோய்நொடியிலும் காணப்படுவதாகவும் பலர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் எனவே இந்த மக்களுக்கு சர்வதேச சமூகம் உரிய நீதியைப்பெற்றுக்கொடுக்கமுன்வரவேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.