Tamil News
Home செய்திகள் மட்டக்களப்பில் கொரோனா 3ம் அலையில் 230 பேர் பலி-மருத்துவர் தௌபீக்

மட்டக்களப்பில் கொரோனா 3ம் அலையில் 230 பேர் பலி-மருத்துவர் தௌபீக்

கோவிட்-19 மூன்றாவது அலையில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகளும் 230மரணங்களும் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் தௌபீக் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கோவிட்-19 தடுப்பு செயலணியின் விசேட கூட்டமானது    மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் கோவிட்-19 தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், நோயாளர்களுக்கான இடப்பற்றாக்குறை, வர்த்தக நிலையங்களின் வர்த்தக செயற்பாடுகள், வர்த்தகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் இக் காலகட்டத்தில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது தொடர்பாகவும், அதற்காக அரச நிறுவனங்கள் எவ்வாறான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தெடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்,

“நேற்று ஒரே நாளில் கிழக்கு மாகாணத்தில் 174 கோவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். ஆகக்கூடுதலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 101நோயாளிகளும் கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 43பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 14பேரும் அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16பேரும் அடங்குகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணமுமாக மொத்தம் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.

கோவிட்-19 மூன்றாவது அலையில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகளும் 230மரணங்களும் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளன. அதிகமான மரணங்கள் திருகோணமலையிலும் அடுத்ததாக மட்டக்களப்பிலும் ஏற்பட்டுள்ளன. கல்முனை, அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் கணிசமான மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலே கோவிட்-19 பரவுகின்ற வேகத்தை பார்க்கின்றபோது பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் நோயானது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதா என்பது ஐயத்திற்குரிய விடயமாகும். ஆகவே நாம் ஒவ்வொருவரும் அரசாங்கத்தினால் அவ்வப்போது எமக்கு வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் சிறந்த முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.

பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையினால் கோவிட்-19 தொற்றானது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற பிழையான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அதனால் மக்கள் தாங்கள் விரும்பியபடி பாதைகளிலும் வீடுகளிலும் ஒன்றுகூடி எந்தவிதமான பாதுகாப்பு முறைகளையும் கடைப்பிடிக்காமல் நடப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இது முற்றிலும் தவறானதொரு எண்ணமாகும். ஏனென்றால் எங்கள் நாட்டில் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் கொவிட் தொற்றானது குறைந்து தற்போது கூடிக்கொண்டு செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட்-19 கட்டுப்பாடானது முன்பைவிட ஓரளவு திருப்திகரமாக இருந்தாலும் நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் குறையவேண்டியிருக்கின்றது.

ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஒன்றுகூடலில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் அதனை பரிசோதனை செய்துகொள்வதற்கோ அதற்குரிய சிகிச்சை மையங்களுக்கு செல்வதற்கோ பின்நிற்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் வீட்டிலிருக்கும்போது உங்களது நோய் கிருமிகள் மற்றவருக்கு பரவி அனைவரையும் ஆபத்துக்குள்ளாக்கும் நிலையுள்ளது”. என்றார்.

Exit mobile version