மட்டக்களப்பில் இதுவரையில் கொரோனாவால் 76 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 11கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப் படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று(23)காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,“கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 178கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் மொத்தமாக 5400கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 76பேர் மரணமடைந்துள்ளனர்.இதுவரையில் 3623பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதுடன் 1524பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மூன்றாவது அலையின்போது 4417பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன் 67பேர் மரணமடைந்துள்ளனர்

காத்தான்குடி,கோறளைப்பற்று மத்தி,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் திடீர் கொரோனா தொற்று அதிகரிப்பினால் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளது. காத்தான்குடி சுகாதார பிரிவில் 08கிராம சேவையாளர் பிரிவுகளும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 கிராம சேவையாளர் பிரிவுகளும் கோறளைப்பற்று மத்தியில் 01 கிராம சேவையாளர் பிரிவும் தனமைப்படுத்தப்படவுள்ளது” என்றார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான கொரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணம் ஒன்றுகூடல்கள் எனவும் ஒன்றுகூடல்களை தவிர்ப்பதன் மூலமே கொரோனாதொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.