Tamil News
Home செய்திகள் மட்டக்களப்பின் இயற்கை வளங்களைச் களவாடும் சிங்களவர்களுக்கு எதிராக போராட்டம்

மட்டக்களப்பின் இயற்கை வளங்களைச் களவாடும் சிங்களவர்களுக்கு எதிராக போராட்டம்

மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று, மயிலவெட்டுவானில் ஆற்று மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்க கூடாதென வலியுறுத்தி இன்று கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

மயிலவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மயிலவெட்டுவான் உப்போடை வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள் ஆகியோரால் செவ்வாய்க்கிழமை (15) நடத்தப்பட்டுள்ளது.

மயிலவெட்டுவான்- வீரக்கட்டு பகுதியில் ஆற்று மணல் அகழ்வதற்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் 10பேர் உட்பட 25 பேருக்கு விஷேட அனுமதி வழங்கவதற்கான பெயர் விபரங்களை நீர்ப்பாசனத் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கடந்த 2ஆம் திகதி, புவிசரிதவியல் அளவை, சுரங்கங்கள் பணியக மட்டக்களப்பு மாவட்ட பொறியிலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

எனவே, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் குறித்த நடவடிக்கையினைக் கண்டித்தே கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மயிலவெட்டுவான் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி இலட்சுமி யோகராசா கருத்து தெரிவிக்கையில், “மயிலவெட்டுவான் கிராமம் ஒவ்வொரு வருடமும் மார்கழி வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதோடு கிராம மக்கள் மேட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்வார்கள். வெள்ள நீரில் இதுவரை இரண்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இம்முறை வரும் வெள்ளத்தில் மற்றுமொரு வீடு சேதமடையும் அபாயம் உள்ளது.

இந்த ஆற்றில் மணல் அகழப்படுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு கிராமம் ஆற்றுக்குள் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டே நாங்கள் மயிலவெட்டுவான் ஆற்றில் மணல் அகழ்வதை தடை செய்யுமாறு கோரிக்கை முன்வைத்தோம். எமது கோரிக்கையை ஏற்று கடந்த காலங்களில் மணல் அகழ்வதற்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது அரசியல்வாதிகளின் சிபாரிசின் அடிப்படையில் வெளிமாவட்ட மற்றும் வெளியூர்களைச் சேர்ந்தவர்களுக்கு ஏறத்தாள ஒரு இலட்சம் கியூப் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிகிறோம். இதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

ஆற்றில் மணல் அதிகமாக காணப்பட்டால் மேலதிக மணலை அகழ்வதற்கு உள்ளூரில் உள்ளவர்களுக்கு அல்லது கிராம அமைப்புகளுக்கு அகழ்வதற்கு அனுமதி வழங்குங்கள்.

வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளி ஊரிலுள்ள தனவந்தர்களுக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அவர்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள அளவை விட மேலதிகமாக அகழ்வில் ஈடுபடுவார்கள் இதனால் எங்கள் கிராமம் முற்றாக அழிவடையும் அபாயம் ஏற்படும்.

இதனைக் கருத்திற்கொண்டு மணல் அகழ்வதற்கான அனுமதியை உடனடியாக தடை செய்யுமாறு உரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version