Tamil News
Home செய்திகள் மஞ்சளுக்கான இறக்குமதித் தடையை நீக்க இந்திய மத்திய, மாநில அரசுகள் இலங்கையை வலியுறுத்த வேண்டும் – ராமதாஸ்...

மஞ்சளுக்கான இறக்குமதித் தடையை நீக்க இந்திய மத்திய, மாநில அரசுகள் இலங்கையை வலியுறுத்த வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

மஞ்சள் இறக்குமதிக்கு இலங்கை அரசு விதித்திருக்கும் தடையால் இலங்கை மக்களும், தமிழக உழவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சள் மற்றும் தங்கக் கடத்தல்காரர்கள் மட்டும் தான் இந்தத் தடையால் பயனடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி வாய்ப்புகள் குறைந்ததையடுத்து, ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் மஞ்சள் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் ஏற்றுமதிக்கு புத்துயிரூட்டி, உழவர்களின் கவலையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

இந்திய மஞ்சளுக்கு மருத்துவத் தன்மையும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பதால், அதற்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற மஞ்சள் சந்தையாக ஈரோடு திகழ்வதால், தமிழகத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விளைவிக்கப்படும் மஞ்சள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம் ஆகும்.

தேவை அதிகரித்ததன் காரணமாக ஈரோடு மஞ்சள் சில ஆண்டுகளுக்கு முன் குவிண்டால் ரூபா 18,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இப்போது ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்து, குவிண்டால் 6,000 இற்கும் குறைவாகவே ஏலத்தில் எடுக்கப்படுகின்றது. அதனால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு சந்தையில் ஒரு கிலே 60 ரூபாவிற்கு விற்கப்படும் மஞ்சள் இலங்கையில் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூபா 4,000 இற்கு (இந்திய மதிப்பில் 1,600) விற்கப்படுகிறது. இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்க முன்னர் இலங்கையில் ஒரு கிலே மஞ்சள் 500 (இந்திய ரூபாய் 200) என்ற விலையில் விற்கப்பட்டது.

இலங்கை அரசின் மஞ்சள் இறக்குமதி தடையால் இலங்கை மக்களும், தமிழக உழவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் மஞ்சள் தேவை அதிகரித்ததன் விளைவாக தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாகமஞ்சள் கடத்தப்படுவது கடந்த சில மாதங்களில் பெருமளவில் அதிகரித்துள்ளது.

எனவே இந்த விடயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி, ஈரோடு மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.  இதன் மூலம் மஞ்சள் உழவர்கள் வாழ்வில் மங்கலம் பொங்க வகை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version