மக்கள் போராட்டங்களை தடுக்க காவல்துறையினர் முயற்சி – எஸ்.சிவயோகநாதன் குற்றச்சாட்டு

நீதிமன்றினை தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டத்தினை தடுக்க முனைவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் முன்னெடுக்கப்படும் சூழற்சி முறையிலான போராட்டத்தில் பங்குகொண்டுள்ளவர்களுக்கு தடையுத்தரவுகளை வழங்கும் நடவடிக்கைகளை  காவல்துறையினர் முன்னெடுத்தனர்.

IMG 0103 மக்கள் போராட்டங்களை தடுக்க காவல்துறையினர் முயற்சி - எஸ்.சிவயோகநாதன் குற்றச்சாட்டு

இதன்போது போராட்டம் நடாத்தும் இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடையுத்தரவுகளில் உள்ள பெயர்களை குறிப்பிட்டபோது அதில் உள்ளவர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் அங்கிருந்தவர்களின் பெயர்களை பதிவு செய்துகொண்டு  சென்றனர்.

மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையம் ஊடாக இந்த தடையுத்தரவுகளை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

IMG 0110 1 மக்கள் போராட்டங்களை தடுக்க காவல்துறையினர் முயற்சி - எஸ்.சிவயோகநாதன் குற்றச்சாட்டு

சுழற்சி முறையிலான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினர் ஐந்து பேரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கான தடையுத்தரவுகளை வழங்கவுள்ளதாகவும் குறித்த பகுதியில் போராட்டம் நடாத்தமுடியாது என தெரிவித்ததாக சிவயோகநாதன் தெரிவித்தார்.

ஜனநாயக ரீதியான நாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை நசுக்குவதற்கான செயற்பாடுகள் தொடர்ந்து  முன்னெடுக்கப் படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.