மக்களின் சமூக அக்கறையின்மையே வெள்ளத்திற்கு காரணம் -அரசாங்க அதிபர் க.மகேசன்

யாழ். மாவட்ட மக்களின் சமூக அக்கறையின்மையே வெள்ள நிலைமைக்கு காரணம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலை தொடர்பாக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,    “நீர் வடிந்து ஓடாத நிலைமை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

உள்ளூராட்சி சபை முயற்சி எடுத்தும்,  பொதுமக்களின் ஒத்துழைப்பின்மை,  சமூக அக்கறையற்ற செயற்பாடு காரணமாக இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

பொதுமக்கள் உள்ளூர் அதிகார சபையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கழிவுப்பொருட்களை வீசுதல், வடிகால்களை மூடுதல், அல்லது தேவையற்ற பொருட்களை பொது இடங்களில் வீசுதல் போன்ற செயற்பாட்டை மேற்கொள்ளும் காரணத்தினாலும், வடிகால்களை சட்டவிரோதமாக தடுப்பதும் வெள்ள நீர் தேங்கும் அவல நிலை ஏற்பட காரணமாகிறது.

இந்த விடயத்தில் யாழ். மாநகர சபை மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் இடர் ஏற்பட்ட பகுதிகளில் அதனை செயற்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.

எதிர்காலத்தில் உடனடியாக சீர் செய்ய வேண்டியவற்றை உடனடியாகவும் ஏனையவற்றை அதனை உரியவாறு செயற்படுத்துவதற்கு உரிய தகவலைப் பெற்று அதனை செயற்படுத்துவதற்கு உள்ளோம்” என்றார்.