Tamil News
Home செய்திகள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்-நினைவுத் தூபி இடிப்புச் சம்பவத்திற்கு அங்கஜன் எம்.பி கண்டனம்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்-நினைவுத் தூபி இடிப்புச் சம்பவத்திற்கு அங்கஜன் எம்.பி கண்டனம்.

அனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டுமென யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்புச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கியுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நான் மக்களின் பிரதிநிதியே தவிர அரசின் பிரதிநிதி அல்ல, மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எனது பதவியைக் கூட ராஜினாமா செய்வேன் என கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது குறிப்பிட்டிருந்தேன். அந்தவகையில் தமிழ் மக்களின் அடையாளச் சின்னம் ஒன்று தகர்க்கப்பட்டிருக்கும் இவ்விடயத்தில் என்னால் கரிசனை காட்டாமல் இருந்து விட முடியாது. ஓர் நினைவுத் தூபியை அழிப்பதென்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அது பேரிழப்பாக அமையும். யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி அழிப்புச் சம்பவமும் தமிழ் மக்கள் மனங்களில் ஓர் வடுவாக மாறியுள்ளது.

அனுமதி என்ற விடயத்தில் அன்று விடப்பட்ட தவறு இன்று ஓர் அடையாளச் சின்னம் அழிக்கப்படக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்த நினைவுச் சின்னம் இன மத பேதங்களுக்கு அப்பால் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த அனைவருக்கும் பொதுவான ஒன்று.

நினைவுத் தூபியை இடிக்க வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பில் எமக்கு எந்தவொரு தகவலும் கல்விச் சமூகத்தால் தெரிவிக்கப்படவில்லை. அடையாளச் சின்னம் அழிக்கப்பட்ட பின்னரே இவ் விடயம் தொடர்பில் எம்மால் அறிய முடிந்தது.இது தொடர்பில் முன்பாகவே எமக்கு தெரியப்படுத்தியிருந்தால் இன்று அந்த தமிழ் மக்களின் அடையாளச் சின்னம் அழிவின்றி இருந்திருக்கும்.

எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து இளைய சமுதாயம் திசை மாறிச் செல்வதனையும், இனங்களுக்கிடையே முரண்பாடுகள் வளர்க்கப்படுவதனையும் அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும்.

பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய விடயம் ஒன்று இன்று வன்முறை வரை வளர்ந்து நிற்பது வருத்தமளிக்கின்றது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version