மக்களின் அலட்சியமே கொரோனா தொற்று அதிகரிக்க காரணம்: தமிழக சுகாதாரத்துறை குற்றச்சாட்டு

“தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதற்கு பொதுமக்களின் அலட்சியமே காரணம்” என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் சவாலாக உள்ளன,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  கொரோனா தொற்று மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.

புதிதாக இந்தியாவில் 28,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரம் நாடு முழுவதும் இது வரையில்  1,14,38,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,59,044 ஆக அதிகரிதுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 “பொதுமக்கள் மத்தியில் கொரோனா பரவல் தொடர்பாக ஒருவித அலட்சியம் நிலவுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் பத்தில் இருந்து சதவீதத்துக்கு உட்பட்டுத்தான் உள்ளது. அதனால் எந்த ஆபத்தான சூழலிலும் நமக்கு வைரஸ் பரவாது என்றவாறு சிலர் உள்ளனர்.

குறிப்பாக, பெப்ரவரி மாதத்தை பொறுத்தவரை வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. அதற்கு காரணம், அப்போது நடந்த திருமணங்கள், பிறந்தநாள், இறப்புகள் மற்றும் அதற்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் என தெரிய வந்துள்ளது. இந்த மாதத்தில் அளவுக்கு அதிகமான அரசியல் கூட்டங்கள் நடக்கின்றன. அவற்றில் பங்கெடுக்க வருவோர் பலரும் முக கவசம் அணிவதில்லை.

கொரோனா பரவல் தடுப்புக்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வழிமுறைகள் எல்லோருக்கும் பொருந்தும். குறிப்பாக, கொரோனா வைரஸ் ஒரு நுண்கிருமி. அதற்கு பாகுபாடு கிடையாது.

எந்த இடத்திலும் நாம் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின்றி செயல்பட்டால் அது நம்மை தாக்கவே செய்யும். அது மத ரீதியாக, கலாசார அல்லது அரசியல் கூட்டமாக இருந்தால் கூட அங்கு முக கவசம் அணியாமல் கை கழுவாமல், சமூக இடைவெளியின்றி இருப்பவர்கள் மத்தியில் வைரஸ் பரவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, இந்த காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் சில விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக, பள்ளிகளை எடுத்துக் கொண்டால் அவற்ரில் காய்ச்சல், சளி இருப்பவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது. அவர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு உடல் சுகவீனம் தொடர்ந்தால் உடனடியாக அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதேபோல, உடனடியாக தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட வேண்டும். காய்ச்சல் இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மேல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதேபோல, வங்கிகள், விடுதிகள், உணவகங்கள், மதசார்பற்ற கூட்டங்கள், கலாசார கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், சந்தைகள், பொதுப்போக்குவரத்து என அனைத்துக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வழிகாட்டுதல் நெறிகளை வெளியிட்டுள்ளன.

அலுவலகங்களுக்கும் பொது இடங்களுக்கும் வருவோர் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும், அவர்கள் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் அல்லது உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே உள்ள வர அனுமதிக்க வேண்டும். ஆனால், இதில் எல்லாவற்றிலுமே சுணக்கம் காட்டப்படுகிறது. அதனால்தான் மைலாப்பூரில் உள்ள வங்கியிலும், வில்லிவாக்கத்தில் உள்ள விடுதியிலும் வைரஸ் பரவல் காணப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் கூட ஒரு கல்லூரி விடுதியில் கூட பலருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. எனவேதான் போதிய விழிப்புடன் செயல்படுமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறோம்” என்றார்.