போர் வெற்றிக்காக பரபரப்பாக இயங்கும் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

23 642f2666db89c போர் வெற்றிக்காக பரபரப்பாக இயங்கும் உலகம் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

போர் ஆரம்பமாகிய நாளில் இருந்து உக்ரைன் போரின் களமுனையில் உக்ரைன் தரப்பு தற்காப்பு தாக்குதல்களில் தான் ஈடுபட்டு வருகின்றது. வலிந்த தாக்குதலை மேற்கொள்ள கடந்த வாருடத்தின் நடுப்பகுதியில் அது முயன்றபோதும் ரஸ்ய படையினர் தமக்கு பாதகமான களமுனைகளில் இருந்து வெளியேறியதால் அது உக்ரைனுக்கு வெற்றியாக அமையவில்லை.

இந்த நிலையில் தற்போது ஒரு வலிந்த தாக்குதலை மேற்கொண்டு தமது படையினரின் மனவலிமையை தக்க வைக்கவும், உதவிகளை வழங்கும் நேட்டோ நாடுகளை திருப்த்திப்படுத்தவும் வேண்டிய நிலையில் உக்ரைன் உள்ளது.

எனவே தான் அண்மைய நாட்களின் உக்ரைனின் வலிந்த தாக்குதல் தொடர்பில் மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன. வலிந்த தாக்குதலுக்காக உக்ரைன் 90,000 தொடக்கம் 100,000 படையினரை கொண்ட புதிய 16 பிரிகேட்டுக்களை உருவாக்கியுள்ளதாகவும், ஆனால் அவர்கள் எந்த முனையில் தாக்குதலை மேற்கொள்ளப் போகின்றனர் என்பது குறித்து தெரியவில்லை எனவும்  பிரித்தானியாவின் பாதுகாப்பு கற்கைகளுக்கான றோயல் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், உக்ரைன் படையினரிடம் மிகவும் சிறந்த தாக்குதல் திட்டம் இருப்பதாகவும், எனவே அவர்கள் அதனை தவிர்ப்பதற்கான காரணம் எதுவும் இருக்கப்போவதில்லை எனவும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லெயிட் ஒஸ்ரின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் படையினர் அதிக வெற்றிகளை அண்மைய காலங்களில் பெற்றுள்ளனர், நாம் பெருமளவான படையினரை பயிற்றுவித்துள்ளோம், தேவையான ஆயுதங்களையும் வழங்கியுள்ளோம் எனவே அவர்கள் தாக்குதல் நடத்தும் நிலையில் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேட்டோவின் படை அதிகாரிகள் மோல்டோவா பகுதியில் கூடி இரகசிய திட்டங்களை கடந்த வாரம் வகுத்துள்ளனர். நேட்டோ நாடுகள் வழங்கிய லெபாட் வகை டாங்கிகளும் உக்ரைனை சென்றடைந்துள்ளன. அதேசமயம் அமெரிக்காவின் செய்மதிகள் வெளியிட்ட புகைப்படங்களில் ரஸ்யா கிரைமியா கடற்கரை பகுதியில் பாரிய பதுங்குகுளிகளை அமைத்து பலப்படுத்தி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் வாரங்கள் உக்ரைன் களமுனை ஒரு உக்கிரம் மிக்கதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

ஆனால் உக்ரைன் படையினர் வலிந்த தாக்குதல் ஒன்றை ஆரம்பிக்கவுள்ள நிலையில் அமெரிக்க புலனாய்வுத்துறையின் இரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளதானது இந்த போரில் நேட்டோவினதும் அமெரிக்காவினதும் பங்களிப்பை தெளிவாக காண்பித்துள்ளது.

இரு தரப்பும் இரகசியமாக வாங்கும் ஆயுதங்கள், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நேட்டோ நாடுகளின் சிறப்பு படையணிகள் களத்தில் பணியாற்றுவது போன்ற தகவல்கள் இங்கு முக்கியமாக கருதப்படுவதுடன், சீனாவின் புதிய கைப்பசொனிக் ஏவுகணை தொடர்பிலும் தகவல்களை அமெரிக்கா திரட்டியுள்ளது வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் வான்படையை சேர்ந்த 21 வயதான சைபர் நடவடிக்கை பிரிவில் பணியாற்றியவரே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

எனினும் வெளியாகிய தகவல்களால் தமது படை நடவடிக்கைக்கு பாதிப்புக்கள் ஏற்படாது என தெரிவித்துள்ளார் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் கிறில் புடனோவ்.

ஏதாவது பிரச்சனை என்றால் அதனை நாம் பார்த்துக்கொள்வோம். தாக்குதல் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. வலிந்த தாக்குதலின் வெற்றியை எல்லோரும் விரைவில் பார்க்க போகின்றீர்கள். இந்த வெற்றி எமக்கு மட்டுமல்ல எமது மேற்குலக நண்பர்களுக்கும் தேவையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எமது தாக்குதல் பலமாக இருக்கும், அதற்காக படையினரை தயார் செய்துள்ளோம் மிக விரைவாக தாக்துல் ஆரம்பமாகும் என இந்த வாரம் தமது பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசும்போது உக்ரைன் அதிபர் விளமிடீர் செலன்ஸ்கியும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த போரில் உக்ரைன் வெற்றிபெற்றால் அது நேட்டோ போருக்குள் நுளைந்ததாக அர்த்தமாகிவிடும், ஏனெனில் நேட்டோவின் பங்களிப்பு இல்லாமல் உக்ரைனால் ரஸ்யாவை தோற்கடிக்க முடியாது. எனவே இது மூன்றாவது உலகப்போராக மாறும் என தெரிவித்துள்ளார் பிரான்ஸின் தேசிய பேரணி கட்சியை சேர்ந்த லி பென்.

ஓய்வூதிய வயதெல்லையை அதிகரித்ததற்காக கடந்த 11 நாட்களாக பிரான்ஸில் தொடர் மக்கள் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் லி பென்னின் செல்வாக்கு அங்கு உயர்ந்துள்ளது. தற்போது தேர்தல் இடம்பெற்றால் அவர் 55 விகித வாக்குகளை பெறுவார் என தெரிவித்துள்ளது எலபே ஆய்வு நிலையம்.

ஆனால் லீ பென்னிற்கு 2014 ஆம் ஆண்டு ரஸ்யாவின் வங்கி 9 மில்லியன் ஈரோக்களை கடனாவ வழங்கியிருந்ததாகவும், அவர் ரஸ்யாவுடன் நெருக்கமானவர் எனவும் பிரான்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. நேட்டோவில் இருந்து பிரான்ஸ் விலகவேணும் என்பதும் லீ பென்னின் விரும்பம்.

இதனிடையே, சீனாவுக்கு பயணங்களை மேற்கொள்ளும் ஐரோப்பிய தலைவர்களால் ஐரோப்பாவில் பல குழப்பங்கள் எற்பட்டுள்ளது. சீனாவுக்கு சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், ஐரோப்பா அமெரிக்காவின் பிடியில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக இயங்கவேண்டும் என தெரிவித்த கருத்தும் பல விவதாங்களை தோற்றுவித்துள்ளது. போலந்து அதற்கு எதிராக கருத்தை வெளியிட்டபோதும், ஐரோப்பிய சபையின் தலைவர் சார்ள்ஸ் மைக்கேல் மக்ரோனின் கருத்தை ஆதரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் சீனாவுக்கு செல்லும் அதேசமயம், பிரேசிலின் புதிய தலைவர் லூலா ட சில்வாவும் சீனாவுக்கு சென்றுள்ளார். சீனா, ரஸ்யா, இந்தியா, தென்னாபிரிக்கா பிரேசில் ஆகிய நாடுகளின் பிறிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்க டொலரை தவிர்த்து வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் அங்கு தெரிவித்துள்ளார். இந்த கூட்டமைப்பை 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் (அதாவது முள்ளிவாய்கால் இனப்படுகொலையின்; பின்னர்) உருவாக்கியத்தில் அவரின் பங்கு முக்கியமானது.

ஐரோப்பின தலைவர்களின் பயணங்களை போலவே ரஸ்யாவின் வெளிவிவகார அமைசர் லறோவும் உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் முயற்சிகளின் ஈடுபட்டு வருகின்றார். இந்தவாரம் சீனா, ஈரான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், ரெக்மெனிஸ்ரான் மற்றும் உபகிஸ்தான் ஆகிய ஆப்கானிஸ்தானை சூழவுள்ள நாடுகளை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

மறுவளமாக சவுதி அரேபியாவும், ஈரானும் கூட்டு சேர்ந்துள்ள அதேசயம், யேமனுடன் சமாதானம் செய்ய சவுதி விருப்பம் கொண்டுள்ளது. அதன் முதல் கட்டமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், யேமனை சேர்ந்த 125 போர்க் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வடகொரியாவை பொறுத்தவரையில் முதல் தடவையாக திண்ம எரிபொருளில் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Hwasong-18) ஒன்றை இந்த வாரம் பரிசோதனை செய்துள்ளது.

அதாவது ஒவ்வொரு வாரமும் உலகில் பல மாற்றங்கள் நிகழ்வதுடன், பரபரப்பாகவே உலகம் நகர்கின்றது. ஆனால் அது அமைதிக்கான நகர்வுகளாக இல்லை என்பது தான் வருத்தமானது.