Home ஆய்வுகள் போரும், பொருளாதார அழிவுமாக கடந்து செல்லும் 2023 – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

போரும், பொருளாதார அழிவுமாக கடந்து செல்லும் 2023 – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கடந்த 2022ஆம் ஆண்டு ஆரம்பித்த உக்ரைன் போர் உலகின் பொருளாதாரத்திலும், பூகோள அரசியலிலும் மீளமுடியாத மாற்றங்களை ஏற்படுத்தியவாறு சென்றுகொண்டிருக்கின்றது. கடந்த 22 மாதங்களாக அந்த போர் பல பரிணாமங்களின் ஊடாக நகர்கின்ற அதேசமயம், இந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகிய பாலஸ்தீன – இஸ்ரேல் போர் மிகவும் மோசமான இழப்புக்களுடன் தொடர்கின்றது.

கடந்த இரண்டு வருடப்போரில் உக்ரைனில் ஏறத்தாள 10000 மக்கள் கொல்லப்பட்டபோதும், கடந்த 3 மாதப்போரில் காசாவில் 22,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அதில் 60 விகிதமானவர்கள் குழந்தைகளும், பெண்களும் ஆகும். அதாவது கடந்த ஆண்டு உலகில் மோசமான ஆண்டாகவே பார்க்கப்படுகின்றது.

gaza 77 போரும், பொருளாதார அழிவுமாக கடந்து செல்லும் 2023 - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இரண்டு போர்களிலும் மேற்குலக நாடுகளும் அது சார்ந்த அனைத்துலக அமைப்புக்களும் கடைப்பிடித்த விதி முறைகள், மற்றும் அனைத்துலக குறிப்பாக மேற்குலக ஊடகங்கள் இரு போர்களையும் அணுகிய விதம் என்பன இந்த வருடத்தில் பல போலியான விம்பங்களை உலகின் முன் தெளிவாக்கியுள்ளது.

நாடுகளுக்கு இடையிலான பேரழிவுமிக்க போர்களை தடுப்பதற்கு என இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையானது உலகில் உள்ள மக்களை காப்பதற்கான அமைப்பு அல்ல என்பதை 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போதும், தற்போது இடம்பெற்றுவரும் காசா போரின் போதும் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே தான் ஐ.நாவுக்கு இணையான மாற்று அமைப்பு ஒன்று மேற்குலகம் சாராத அமைப்பாக உருவாகவேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த ஆண்டில் வலுப்பெற்றுள்ளன.

மேலும் பொருளாதார ரீதியாகவும் மேற்குலகம் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்த ஆண்டாக 2023 நகர்ந்துள்ளது. அடுத்த வருடத்தின் உலகின் பொருளாதார வளர்ச்சி என்பது அமெரிக்காவின் வட்டி விகிதம், எண்ணை விலை, சீனாவின் பொருளாதாரம் ஆகியவற்றில் தான் தங்கியிருக்கப்போகின்றது என்ற எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் போரை தொடர்ந்து ரஸ்யா மீது மேற்குலக நாடுகள் கொண்டுவந்த பொருளாதார தடைகள், பாரிய தாக்கங்களை ரஸ்யாவில் ஏற்படுத்தவில்லை என்பது மட்டுமல்லாது அது மேற்குலக நாடுகளை அதிகம் பாதித்துள்ளது. அதன் தாக்கங்களை இந்த வருடத்தில் அதிகம் காணக்கூடியதக இருந்தது. உலகின் எண்ணை வர்த்தகத்தில் 20 விகிதமானவை இந்த ஆண்டு அமெரிக்க டொலர் அல்லாத நாணயங்களில் தான் நிகழ்ந்துள்ளதாக த வோல் ஸ்ரீற் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் உக்ரைன் மேற்கொண்ட ஊடறுப்பு தாக்குதல் தோல்வியில் முடிந்ததுடன், இரண்டுவருடப் போரில் அது ஏறத்தாள 4 இலட்சம் படையினரையும் இழந்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏயின் முன்னாள் ஆய்வாளர் லாறி ஜோன்சன் அதனை தெரிவித்துள்ளார். நேட்டோ வழங்கிய 130 பில்லியன் டொலர்கள் ஆயுத உதவிகளும் பலன் தரவில்லை என்பதுடன், உக்ரைனின் தோல்வி நேட்டோவின் வீழ்ச்சியாக பார்க்கப்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், போரினால் வீழந்த இஸ்ரேலின் பொருளாதாரத்தை கட்டியமைக்க அமெரிக்கா அதிக நிதி உதவிகளை வழங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது உக்ரைனுக்கான நிதி உதவிகயை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் குறைக்க வேண்டிய நிலையை தோற்றுவித்துள்ளது. மறுவளமாக உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. ஜேர்மனின் பொருளாதாரம் இந்த ஆண்டு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருந்த 50 பில்லியன் டொலர்கள் நிதி உதவியை ஹங்கேரி நிறுத்தியுள்ளதும் மிகப்பெரும் பின்டைவாகவே பார்க்கப்படுகின்றது.

மத்தியகிழக்கில் இந்த வருடத்தில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதல் என்பது உலக வரலாற்றில் மிகவும் சிறப்பாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஊடறுப்பு தாக்குதல் என படைத்துறை ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. இந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளபோதும் அவர்களில் 315 பேர் இஸ்ரேலின் மிகச் சிறந்த பயிற்சிபெற்ற படையினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் இதுவரையில் வடக்கு மற்றும் தெற்கு காசா பகுதிகள் மிக மோசமான அழிவுகளை சந்தித்துள்ளன. எனினும் ஹமாஸினால் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட பிணைக்கைதிகளை 80 நாட்களாகியும் இஸ்ரேலினால் மீட்க முடியவில்லை.

ஒரு தொகுதி கைதிகளை இரு தரப்பினரும் பரிமாறிக்கொண்டாலும், மீதமுள்ள கைதிகளின் பரிமாற்றம் தொடர்பில் இஸ்ரேலின் கோரிக்கைகளை ஹமாஸ் நிராகரித்தது என்பது ஹமாசின் படைத்தறை பலம் வீழ்ச்சியடையவில்லை என்பதை காட்டுவதாக த நியூயோர்க் ரைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாது உலகத்தலைவர்களுடன் ஒப்பிடும்போது வெளிவிவாகாரக் கொள்கைகளை வகுப்பதில் உக்ரைன் அதிபர் இந்த வருடம் தோல்விடைந்துள்ளதாக த ஸ்ரேற்கிராப் ஊடகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. அதாவது உக்ரைன் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு உள்ளதாகவும், தனது நலன் கருதி அமெரிக்கா அதன் கவனத்தை வேறுபக்கம் திருப்புவது ஒன்றும் புதிது அல்ல என அது மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் பாலஸ்தீன – இஸ்ரேல் போரை தொடர்ந்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள உறுதியற்றதன்மை அந்த பிராந்தியத்தில் ஒரு போரை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை மெல்ல மெல்ல ஏற்படுத்தி வருகின்றது. ஏமன் ஹதீஸ் படையினரின் இடைவிடாத தாக்குதல் செங்கடல் பகுதி ஊடான கப்பல் போக்குவரத்தை அது கடுமையான பாதித்துள்ளது.

ஏற்கனவே மிகப்பெரிய 6 கப்பல் நிறுவனங்கள் செங்கடலின் ஊடான போக்குவரத்தை தாம் நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில் கப்பல் போக்குவரத்து வர்த்தம் 80 பில்லியன் டொலர்களை இழந்துள்ளது. இந்த நிலையில் பல ஆயிரம் கடல் மைல்கள் சுற்றிச் செல்லும் பயணத்தை தவிர்த்து தமது இழப்புக்களை தவிர்ப்பதற்காக பல கப்பல் நிறுவனங்கள் தாங்களுக்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என செங்கடலினுள் நுளையும் போது ஏமனுக்கு அறிப்பது என்ற உடன்பாட்டுக்கு வந்துள்ளன. அதாவது 20 நாடுகளைக் கொண்ட அமெரிக்கா தலைமையிலான கடற்படை கூட்டணியினால் வர்த்தக கப்பல்களை பாதுகாக்க முடியாத நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகின்றது.

இதனிடையே, அடுத்த வருடம் ரஸ்யாவுடனான ஒரு போருக்கு தயாராக இருக்குமாறு நெதர்லாந்தின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் மாட்டின் விஜ்னேன் தனது படையினருக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளார்.

ஆனால் மிகப்பெரும் போருக்கு தேவையான அணுவாயுதங்கள், ஏனைய வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்குமாறு வடகொரிய அதிபர் தனது படையினருக்கு உத்தரவிட்டிருந்ததும், அதனை தொடர்ந்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றால் தமது உத்தரவுக்காக காத்திருக்காது உடனடியாக தாக்குமாறு தென்கொரிய படைத்தளபதி தனது படையினருக்கு உத்தரவிட்டிருப்பதும் இந்த வருடத்தின் இறுதி மாதத்தில் நிகழந்த சம்பவங்கள்.

அதாவது கடந்து செல்லும் இந்த வருடத்தில் பொருளாதாரத்தின் வீழ்ச்சியையும், போரின் விரிவாக்கத்தையுமே நாம் கண்டுள்ளோம். அது அடுத்த வருடமும் தொடரும் சாத்தயங்களே அதிகம் தென்படுகின்றன. 2024ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஸ்யா, இந்தியா, தாய்வான், இலங்கை, உட்பட ஏறத்தாள 60 நாடுகளில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.

இந்த தேர்தல்களின் முடிவுகள் உலகின் பூகோள அரசியலில் அதிகம் தாக்கம் செலுத்தும் என்பது வெளிப்படையானது. ஆனால் அது தற்போது தீவிரமடையும் போரை மேலும் தீவிரமாக்குமா இல்லை தணிக்குமா என்பது தான் மில்லியன் டொலர்கள் பெறுமதியான கேள்வி.

இந்த வருடம் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்த்தால் உலகம் மிகப்பெரும் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என்பதை தான் தற்போது எதிர்வுகூறமுடியும்.

 

Exit mobile version