Tamil News
Home ஆய்வுகள் போருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

போருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில்  தற்கொலை வீதங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், அவை போதியளவில் மக்களுக்கு பயனளிக்கவில்லை என்றே கூற முடியும்.

வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளார்கள் மாற்றப்படுவது வழமை.  அந்த தகவலின் அடிப்படையில்,  கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தற்கொலைகள்  எண்ணிக்கையளவில் வீழ்ச்சி கண்டுள்ள போதிலும், வருடாந்தம் 500இற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பெறுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இவற்றின் அடிப்படையில், 2013ஆம் ஆண்டு 714 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதோடு, 2014இல் 640 பேரும், 2015இல் 588 பேரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். 2016ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்து 578 ஆகக் காணப்பட்டது.

இவ்வாறு குறைவடைந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 612 எனத் தெரிவிக்கும் வைத்தியசாலை புள்ளிவிபரத்தில்;  இதில் 104 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது. அதே நேரம் 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் 361 பேர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலைக்கான காரணங்களாக பலதை குறிப்பிட்டாலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் இத் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு ஒரு சில காரணங்களை சுருக்கமாக குறிப்பிடலாம்.

பொருளாதாரப் பிரச்சனை

போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் சென்றடைவதில் பல வேறுபாடுகள் இருப்பதை காணமுடிகிறது. சிலருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் உரிய முறையில் கிடைப்பதில்லை. சிலருக்கு வழங்கப்படும் உதவிகள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு போதுமானதாக இருப்பதில்லை,  ஒருசிலருக்கு  தனிப்பட்ட காராணங்களுக்காக உதவிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

புலம்பெயர் தேசத்தில் இருந்து கிடைக்கும் உதவிகள் தற்காலிக உதவிகளாகவே பெரும்பாலும் கிடைக்கின்றன. இவை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு போதிய அளவில் இருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரியது.

பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசும் போது, அவர்கள் நிலையான ஒரு தொழில் முயற்சியை மேற்கொள்வதற்கே விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு உதவி செய்வதற்கு அரசோ, புலம்பெயர் உறவுகளோ தயாராக இல்லை. ஒரு சிலர் தமது முயற்சியாலும் உறவுகளின் பலத்துடனும் தமது வாழ்க்கையை முன்னேற்றி செல்கின்ற போதும், போரால் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்றே கூறலாம். தமது வாழ்க்கைச் செலவை கொண்டு செல்வதில் பாரிய இடர்பாடுகளை சந்தித்தவண்ணமே  உள்ளார்கள்.

மன உளைச்சல்

பேரால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள் முன்னாள் போரளிகளே. இவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

குறிப்பாக அவர்கள் சமூகத்தில் நடத்தப்படும் விதம், பாரிய மன உளைச்சலுக்கு அவர்களை உள்ளாக்குகிறது. அரசியல் விடயங்களோ, பாதுகாப்பு பிரச்சனைகளோ எதுவாக இருந்தாலும்; முன்னாள் போராளிகள் விசாரணை என்ற போர்வையில் துன்பப்படுத்தப்படுகிறார்கள். தனி மனித சுதந்திரத்தையும் மீறி அவர்கள் கண்காணிக்கப்படுவதும், சந்தேகத்துக்கிடமான பார்வைகளும் அவர்களை நிம்மதியான வாழ்வை வாழ முடியாத நிலைக்குத் தள்ளுகிறது.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவி செய்கின்ற பெயரில் பல்வேறு துன்பகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிலர் வெளியில் சொல்லாமல் தமது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சிலர் வெளியில் சொல்லி நீதி கிடைக்காமல் தமது வாழ்கையை தொலைக்கின்றனர்.

வேலையின்மை

இது அனைத்து தரப்பினருக்கும் பொதுப் பிரச்சனையாகவே இருக்கிறது. குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டவர்களில் அங்கவீனமுற்றோர் அதிகளவில் காணப்படுகிறார்கள். அவர்களுக்கான நிலையான  தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. கடந்த 10 வருடங்களில் வடக்கில் ஆக்கபூர்வமான ஒரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.  அரசோ, தமிழ் அரசியல்வாதிகளோ, புலம்பெயர் உறவுகளோ பாரிய திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை என்றே கூறலாம். வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படாததால், போரல் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் தமது வாழ்க்கைமுறையை  சரியான முறையில் கொண்டு செல்வதற்கு முடியாத நிலையில் உள்ளார்கள்.

முன்னாள் போராளிகள் என்றால், எந்த தனியார் நிறுவனங்களிலும் வேலை வாழங்குவதற்கு பின்னிற்கின்ற நிலையே அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு பாரிய தொழிற்சாலைகள் வடக்கில் நிறுவ  வேண்டியது மிக மிக முக்கியமாக இருந்தாலும், அதை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை.

உறவுகளின் பிரிவு

போரால் பலர் தமது உறவுகளை இழந்துள்ளனர். ஒரு கட்டத்துக் மேல் துணை இல்லாமல் வாழ முடியாத சூழ்நிலையும் காணப்படுகிறது. கணவனை இழந்த மனைவி பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் என பலர் இந்த நிலையில் உள்ளார்கள். வாழ்வதாரம் என்பது சீர்படுத்தப்படாததாலும், சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவாலின் தாக்கத்தின் காரணமாக தாம் இழந்த தமது  உறவுகளை நினைத்து மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள். தமது  உறவுகள் இருந்தால் இந்த நிலை ஏற்படாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்ற போது இவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பாக சில காரணங்களை கூற முடியும்.

மேலும் தற்போது இள வயதினரின் தற்கொலைகளும் அதிகரிக்கின்றன. இதற்கு பெற்றோர் ஆசிரியர்கள், மத தலைவர்கள் பாதுகாப்பையும் அறிவுரைகளையும் வழங்க வேண்டியது அவசியமாகிறது.

தற்கொலைகளை தடுப்பதற்கான பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை எந்த அளவுக்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பது குறித்து யாரும் சிந்திப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மாத்திரம் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், ஊடகங்கள் ஊடாக சில கருத்துக்களையும் பகிர்வதன் மூலம் தற்கொலையை தடுத்துவிட முடியாது.

முக்கியமாக ஒவ்வொருவரினதும் பிரச்சினைகளை அறிந்து, அதை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிளை மேற்கொள்ள வேண்டும். போரால் பதிக்கப்பட்டவர்கள் என ஆரம்பத்தில் பலர் உதவிகளை செய்து வந்தார்கள். நிரந்தரமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் தமக்கு விருப்பிய உதவிகளை செய்தார்களே தவிர, அந்த மக்களை சுய முயற்சியாளர்களாக ஆக்குவதற்கு முயற்சிக்கவில்லை. தற்போது உதவிகைளை நிறுத்தும்போது, அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் செய்வது அறியாமல் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சினை வந்தாலும், முதலில் முன்னாள் போராளிகளை சந்தேகப்பட்டு அவர்களை அச்சத்துக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியதுடன், அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.

வடக்கில் பாரிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளையவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க புலம்பெயர் தேசத்தவர்கள் முன்வர வேண்டும், சுயமுயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டங்களை செய்ய வேண்டும் இவைகள் தொடர்சியான முறையில் மேற்கொண்டால் மாத்திரமே பாதிக்கப்பட்ட சமூகத்தில்  இடம்பெறும் தற்கொலைகளை குறைத்துக் கொள்ள முடியும்.

வடக்கில்  போருக்கு பின்னர் தற்கொலைகள் அதிகரிப்பது தொடர்பில் தற்கொலைக்கு முயற்சி செய்து அதிலிருந்து மீண்ட முன்னாள் போராளி ஒருவரிடம் கேட்ட போது, எமக்கு வேண்டும் என்பதைக் கேட்கவோ, வேண்டாம் என்றதை மறுக்கவோ முடியாத நிலையில் வாழ்கின்றோம். எம்முடன் இருந்தவர்கள் எம் நிலை பற்றி அறிவார்கள். எமது சுய கௌரவம் மதிக்கப்படும் நிலை வரும்போது தான் நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு எமது உறவுகளே வழி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Exit mobile version