‘போரின் வடுக்களிலிருந்து மீண்ட சமுதாயமாக நாங்கள் மாறவில்லை’- ஜோசப் ஜெயகெனடி

“போரின் வடுக்களிலிருந்து  நாங்கள் மீண்ட சமுதாயமாக மாறவில்லை. அந்த போரின் வடுவிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் இங்கும் அந்த அவலத்தை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள்” என வவுனியா மாவட்ட  சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜோசப் ஜெயகெனடி தெரிவித்துள்ளார்.

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் ஆண்டுதோறும் ஜுன் 12ம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்துவதும் இத்தகைய விழிப்புணர்வுகளின் ஊடாக சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும் இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்நிலையில், நேற்று நினைவு கூரப்பட்ட இந்த சிறுவர் தொழிலாளர்கள் நாள் குறித்து வடக்கு கிழக்கில் உள்ள சிறுவர்களின் தற்போதைய நிலை தொடர்பில் வவுனியா மாவட்ட  சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்  ஜோசப் ஜெயகெனடி, இலக்கு செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வி,

கேள்வி: வடக்கு கிழக்கில் தொழிலாளச் சிறுவர்கள் என்னும் பிரச்சினையை போரின் சிறுவர்கள் என்னும் தலைப்பில் உலகம் முன்னெடுக்கிறது. இந்நிலையில் இவை குறித்து இன்றைய நிலைகளை எடுத்துரைக்க இயலுமா?

பதில்: நிச்சயமாக, உண்மையிலேயே துன்பமான, துயரமான, வேதனையான ஒரு கேள்விதான். அன்று வடமுனையில் சிறுவர்கள் போராளிகளாக நிற்கின்றார்கள் என்று விமர்சித்த சர்வதேச அரங்கு இன்று சிறுவர்கள் பல்வேறுபட்ட ரீதியில் துன்பப்படுகின்ற, வேதனைப்படுகின்ற அவலங்களை கண்டும்  காணாமல் இருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகத்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது. இருப்பினும் வடக்கு கிழக்கில் எடுக்கப்பட்ட தகவல்களின்படி உண்மையிலேயே சிறுவர் தொழிலாளிகள் என்ற தகவல்கள் சரியாக இல்லாவிட்டாலும் தந்தையை இழந்த சிறுவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

அதே போல் தந்தையை இழந்து தாய் தொழில் தேடி வெளிநாடு செல்கின்ற  சிறுவர்கள் அதிகமாகவும் இருக்கின்ற இந்த நிலைமையில், சிறுவர்கள் வேலைக்கு சென்று தான் தமது குடும்பங்களை பார்க்க வேண்டிய ஒரு அவலத்திக்குள்  தள்ளப்படுவதை நாங்கள்  காணக்கூடியதாக இருக்கின்றது.

இதற்காக நாங்கள் சிறுவர்களுக்கான சட்டங்கள் போட்டு, திட்டங்கள் போட்டு, சட்டங்கள் ஊடாக நாங்கள் வேலை செய்வதில் எந்த நல்ல விடயங்களையும் நாங்கள் பாவித்துக் கொள்ள முடியாது.

சிறுவர் நலன்களில்  அக்கறை கொண்டிருக்கின்றவர்கள், சிறுவர்களுக்கான ஆக்கப்பூர்வமான சில பணிகளை செய்தாக வேண்டியிருக்கின்றது. நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் நேரடியாக பதில் அளிப்பதாக இருந்தால் கடைகளிலும் சரி, வாகனங்கள் பழுதுபார்க்கும் இடங்களிலும் சரி, தெரு ஓரங்களிலும் சரி பல சிறுவர்கள் ஊதுபத்தி விற்கின்றார்கள். அச் சிறுவர்களை நாங்கள் துரத்தி பிடித்து வேதனைப்படுத்துகின்ற  சம்பவங்கள் அதிகமாகவே இருக்கின்றது. அவர்களை வினவுகின்ற போது, “அப்பா இல்லை, அம்மா வெளிநாடு போயிட்டா, அல்லது அம்மா மறுமணம் செய்து விட்டா, நான் அம்மம்மாவுடன் இருக்கின்றேன்”. என்று சொல்கின்ற துன்பமான செய்தியாகத்தான் அவர்களிடம் கேட்க கூடியதாக இருக்கின்றது. எனவே இதை மாற்றி அமைப்பதற்கு நாங்கள் ஆக்கபூர்வமான பல பணிகளை செய்தாக வேண்டி இருக்கிறது.

கேள்வி: பாலியல் சுற்றுலா என்னும் சிறுவர்களை பாலியல் பாழ்படுத்தும் வர்த்தகம் வடக்கில் அதிகம் இடம்பெறுகிறது என்பது ஐ.நா. தரும் தகவலாக உள்ளது. கேட்பவரை பெருங்கவலைக்கு உள்ளாக்கும் இந்நிலை குறித்து உங்கள் கருத்துகள் என்ன?

பதில்:   இலங்கையில் ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற பொழுது சுற்றுலாவினால்   ஒரு சில பிரச்சனைகள் இருக்கின்றன.  சுற்றுலா தொடர்பாகவும், சிறுவர்களை வஞ்சக கடத்தல் என்று சொல்வார்கள்.  சிறுவர்கள் அல்ல, பெரியவர்களையும் கடத்துவார்கள்.  அவுஸ்ரேலியாவுக்கு சட்டமுறையற்ற பயணங்களை மேற்கொண்டு செல்வார்கள்.    கம்போடியாவுக்கு போவார்கள்.  இப்படியான செயற்பாடுகளில் ஒரு சிலர் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.

ஆனால் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக ஒரு சில பதிவுகள் இருக்கின்றது. வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் ஒரு சில பதிவுகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பதிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது. உதாரணமாக  வித்யா கொலை வழக்கில் கூட வெளிநாட்டு செயற்பாடு இருக்கின்றது. அது போல் மீசாலையில் ஒரு சிறுமியின் விடயத்தில்  வெளிநாட்டு தொடர்பு இருக்கின்றது.

இப்படி ஒருசில சம்பவங்கள்  வடக்கில்  நடந்திருக்கின்றது. ஆனால், இது ஒரு முக்கியமான  விடயமாக இருந்த போதும்  வடக்கு கிழக்கில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்று இரண்டு, சட்டரீதியாக  பதிவு செய்யப்பட்டு அதற்கு சட்ட ரீதியாக  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனாலும்  எதிர்காலத்திலும், இது பெரிய பூகம்பமான ஒரு விடயமாகத்தான் நாங்கள் கருதிக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில்  வடக்கு கிழக்கில் சுற்றுலா பயணிகளுடைய வருகை சுற்றுலா பயணிகளுடைய தாக்கம் கூடுதலாக இருக்கின்ற பிரதேசங்கள்  உதாரணமாக கடற்கரை அண்டிய  சிலாபம், அம்பாந்தோட்டை, காலி போன்ற இடங்களில் மிக  அதிகமான பதிவுகள் இடம்பெறும்.

இதை அரசாங்கம் ஒரு வகையில் அங்கீகரிக்கும்.  உதாரணமாக போதைப்பொருளை எப்படி அங்கரித்து விற்பனை செய்கின்றதோ  அதே போல் வெளிநாட்டு பயணிகளின்  வருகையும் அன்னிய செலவாணிக்காக அங்கிகரிக்கின்றது. இது போன்றுதான் நான் முதல் குறிப்பிட்ட விடயமும், பெண்கள் வெளிநாட்டுக்கு செல்வதையும், இலங்கையினுடைய அன்னிய செலவாணிக்காக இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கின்றது. ஆனால் இங்கு பல்வேறு பிரச்சினைகள் உருவெடுத்து துன்பமாக்கியாருக்கின்ற  சம்பவங்களும், அதிகமாக இருக்கின்றது .

கேள்வி: வடக்கு கிழக்கில் சிறுவர்கள் தொழிலாளர்களாக மாறுவதற்கான காரணங்கள் எவை? சமுகப்பிரச்சினை என்ற அளவில் இதனை மாற்ற என்ன செயற்பாடுகள் யார் ?யாரால் முன்னெடுக்கப்படுகின்றது?

பதில்: சமூக பிரச்சினை என்ற ரீதியில் சிறுவர்கள் எப்படியான வேலைகள்  செய்கின்றார்கள்.

சிறுவர்கள் தொழிலாளியாக காரணங்கள் உண்மையிலே போரின் வடுக்களிலிருந்து  நாங்கள் மீண்ட சமுதாயமாக மாறவில்லை. அந்த போரின் வடுவிலிருந்து பாதிக்கப்பட்ட துன்பப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் இங்கும் அந்த அவலத்தை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். அந்த அவலத்தின் குறைபாடுகளுக்குள் ஊனமுற்ற சிறுவர்கள் அடங்குவார்கள்.

அதுமட்டுமல்ல தாய், வெளிநாடு செல்கின்ற நிலை. எனவே இவ்வாறான நிலைமையின் ஊடாக அவர்கள்  பல்வேறுபட்ட துன்பங்களை, துயரங்களை சந்தித்து அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு  வாழ்கின்ற அவலநிலை கூட அந்த குழந்தைகளுக்கு இருக்கின்றன. இதற்காக பணியாற்றுகின்ற பல்வேறுபட்ட அமைப்புகள் இருந்த போதும் அவர்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகதான் இருக்கின்றன.

உதாரணமாக ஒவ்வொரு பிரதேசசெயலகங்களிலும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர்பாதுகாப்பு உத்தியோகத்தர், சிறுவர் உளநலஉத்தியோகத்தர்  என  இருக்கின்றார்கள். இவர்களுடைய பணி கிராமங்களில் கிராமிய அபிவிருத்தி குழுக்களை உருவாக்க வேண்டும். பாடசாலையில் பாடசாலை  பாதுகாப்பு குழுக்களை உருவாக்க வேண்டும். கிராமிய அபிவிருத்தி குழு கிராமிய சிறுவர் கழகங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு  கழகங்களை உருவாக்கி, பாதிக்கப்பட்ட சிறுவர்களை இனம் கண்டு அவர்களுக்கு நல்ல பொறிமுறை ஊடாக முதல் கட்டம் அவர்களுடைய, உணவுக்கான, அல்லது,  அவர்களுடைய மகிழ்ச்சியான வாழ்வுக்காக வேலை செய்ய வேண்டும். அடுத்த கட்டம்  அவர்களுடைய கல்விக்காக வேலை செய்ய வேண்டும். ஆனால்  இப்படியான நடவடிக்கைகள்  அதிகமாக நடைபெறுவது இல்லை என்றுதான் நான் கூறுகின்றேன்.

இதற்கான காரணம் என்னவென்றால்,இவ் உத்தியோகத்தர்களுக்கான வலுவான அரசியல் கொள்கை அல்லது வலுவான சட்ட திட்டங்கள் அல்லது இதனை செய்கின்ற கிராம மட்ட அமைப்புக்கள்  இதனுடைய  முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படாத தன்மைகளும் இருக்கின்றன.

இதனால் அந்த கிராமிய அபிவிருத்தி  குழுவினுடைய பணியை அந்த கிராமிய அபிவிருத்தி குழு செய்வதில்லை. உதாரணமாக அவர்கள்  சிறுவர்கள்தானே இவர்களுக்கு  நாங்கள் நல்ல வேலைகளை செய்ய வேண்டும் என்று  யோசிப்பதில்லை. அவர்கள் யோசிப்பார்கள் எப்படி என்றால், அந்த கிராமத்திற்கு கட்டிடம் ஒன்று வந்தால், அந்த கட்டிடத்தை எடுத்து இன்னொருவரிடம்  கொடுத்து அதனை கட்டி முடித்து அதிலிருந்து ஒருபகுதி பணத்தினை தாம் எடுக்க வேண்டும் என்று. எம் கிராமத்தினுடைய  பெரிய விருட்சம், பெரிய வளம் இந்த கிராமத்தினுடைய வறுமையை போக்ககூடிய  மிகப்பெரிய சக்தியாக இருக்க கூடியவர்கள் இந்த சிறுவர்கள் தான். இந்த சிறுவர்களுக்கு நாங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து இவர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நல்ல செயற்பாடுகளை கிராமமும் செய்வதில்லை. குடும்பமும் செய்வதில்லை.எனவே இப்படியான சம்பவங்கள் ஊடகதான்  இன்னும் சிறுவர்கள்  பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: மலையகத் தமிழரிடை இன்று தொழிலாளச் சிறுவர்கள் பிரச்சினை எவ்வாறு உள்ளது?

பதில்: மிகவும் துன்பகரமான வேதனையான ஒரு விடயம். அவர்கள் இலங்கையினுடைய  பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இங்கு வரவழைக்கப்பட்டார்கள். அன்று வரவேற்கப்பட்டு,ஆங்கிலேயர்களினால் வழங்கப்பட்ட  அந்த இருப்பிடத்தில்தான் அவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று நாங்கள் சுதந்திரம் அடைந்த நாடு என்று சொல்லுகின்றோம். இன்று சுதந்திரம் அடைந்து எழுபது, எழுபத்தி மூன்று ஆண்டுகள் ஓடிய பின்பும், அந்த பழைய சித்தாந்தத்தினுடைய பழைய மரபு வழியாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தில்  ஒரு இருநூறு ரூபாய் கூட்டி ஆயிரம் ரூபாயாக கொடுங்கள் என  கூடி ஆவேசமா வீர வசனங்கள் பேசினாலும் அவர்களுக்கு அந்த பணம் கிடைப்பதில்லை.

அவர்களுடைய பல்வேறுபட்ட துன்பங்கள், துயரங்களுடன் வேதனைப்பட்டு கொண்டே இருக்கின்றார்கள். ஒருபக்கம் மண் சரிவு, அடுத்த பக்கம் வெள்ளப்பெருக்கு அடுத்த பக்கம் அவர்களுடைய வயிற்றுப் பசியை போக்குவதற்கான, பல்வேறுபட்ட  போராட்டங்கள் என நடந்துகொண்டே இருக்கின்றது.

எனவே அங்குள்ள  சிறுவர்களுடைய எதிர்காலமும் இன்னும் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கின்றது. கல்வி மழுங்கடிக்கப்பட்டு அவர்களுடைய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது.

கேள்வி: புலம்பெயர் தமிழர்கள் தமிழர் தாய்க்குலம் மலையகத்திலும் தொழிலாளச் சிறுவர்கள் பிரச்சினையை மாற்ற என்ன செய்ய வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: உதாரணமாக வடக்கு உடைந்து இருக்கின்றது. அதுபோன்று கிழக்கும் உடைந்திருக்கின்றது. இவர்களையே நாங்கள் இணைக்க முடியாமல் இருக்கின்றோம்.  இரண்டு துருவங்களாக இவர்கள் இருக்கின்றார்கள். எனவே  இரு பகுதியையும் இணைத்து   ஒட்டுமொத்த தமிழர்கள் என்ற அணியத்திற்கு ஊடாக,   அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் இங்கு பாரிய தொழில் பேட்டைகளை, தொழிற் பயிற்சிகளை வழங்க வேண்டும். முக்கியமாக  இலங்கையில் இருக்கின்ற பெற்றோர்கள் அதாவது மிக முக்கியமாக தாய்மார்கள் வெளிநாடு போவதை   தடுத்தால் இங்கே உள்ள சிறுவர்கள் சிறப்பாக இருப்பார்கள்.

அதாவது குடும்பத்தில் பிள்ளையை  பராமரிப்பதற்கு அம்மா இருக்க வேண்டும். அந்த அம்மாவுக்கு ஒரு தொழில்வாய்ப்பினை வழங்கி, அந்த அம்மா ஊடாக அவர்கள்  குடும்பத்த கட்டி எழுப்புவதற்கான வசதி வாய்ப்பை  ஏற்படுத்துவோமாக இருந்தால்,  நிச்சயம் எங்களுடைய தாயகம், எங்களுடைய நாடு விடிவு பெறும் என  நான் நம்புகிறேன்.

உண்மையிலேயே நான் நன்றி சொல்லுகின்றேன். எங்களுடைய மாவட்ட ஊடகவியலாளர் சதீஸிற்கும், இலக்கு இணையத்திற்கும் நான் நன்றி சொல்லுகின்றேன். ஏனெனில்  சிறுவர் தொழிலாளர் நாள், சிறுவர்களுடைய வாழ்வில் வாழ்விழந்த, ஒரு துன்பமான ஒரு நாள். ஏன் இதனை கொண்டாடுகின்றார்கள் என்று கூறினால் இவர்களுடைய இந்த துன்பம், துயரங்களை போக்குவதற்காக நாங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக கொண்டாடுகின்றோம்.

இந்த செய்தியை உழைக்கும் வர்க்க சிறுவர்களிற்காக மாற்றி அமைத்து நாளை பெரிய விருட்சமாக திகழ வேண்டும். இந்த துயரங்கள் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இந்த “இலக்கு இணையம்” இந்த நாளை தன்னுடைய இணையத்தில் பதிவு செய்து உலக அரங்கில் இந்த செய்தியை உலக மக்களிற்கு கொண்டு செல்கின்றதற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

நேர்காணல் செய்தவர் – சதீஸ்