போராளி அமைப்புக்கள் அனைத்தும் இப்போது ஓரணியில் வந்திருக்கின்றன-சுரேஷ் பிரேமச்சந்திரன் செல்வி

ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு! - ஜே.வி.பி நியூஸ்

தமிழ் அரசியல் பரப்பில் அதிரடியான மாற்றங்கள் பலவற்றை கடந்த வாரத்தில் காணக்கூடியதாக இருந்தது. பிரதான தமிழ்த் தரப்பான தமிழ்க் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியிருக்கின்றது. மற்றைய பங்காளிக் கட்சிகள் ஏனைய தமிழத் தேசியக் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான உபாயங்களை வகுத்துக்கொண்டுள்ளன. இந்தப் பின்னணியில் இந்த செயற்படுகளில் தீவிரமாகச் செயற்படும் ஒருவராக ஈ.பி.ஆா்.எல்.எப். அமைப்பின் தலைவா் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த வாரம் லண்டன் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை முன்வைத்தாா். அதிலிருந்து முக்கியமான பகுதிகள் இலக்கு வாசகா்களுக்காக..

கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது என்ற தீா்மானத்தை தமிழரசுக் கட்சி எடுத்திருக்கின்றது. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில் – தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளையும், அமைப்புக்களையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. இருந்தபோதிலும் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பிரப்பில் உள்ள ஏனைய கட்சிகள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்யத் தேவையில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பொதுச் சின்னம் ஒன்று தேவையில்லை என்றும் அவா்கள் முடிவு செய்திருக்கின்றாா்கள்.

ஆக, அவா்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சியின் சொல்லுக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றாா்கள். ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் எழுத்துமூலமாக முன்வைத்த கோரிக்கைகளை அவா்கள் நிராகரித்திருப்பதுடன் மாத்திரமன்றி, பங்காளிக் கட்சிகளையும் தனித்துத் தோ்தலில் போட்டியிடுமாறும் அவா்கள் ஆலோசனை கூறியிருக்கின்றாா்கள். இந்த நிலையில், தமிழரசுக் கட்சி இந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, தனித்துவமாக தோ்தலில் போட்டியிடப்போவதாகக் கூறியிருக்கின்றாா்கள்.

இதற்காக அவா்கள் தெரிவித்திருக்கும் காரணம் ஏற்கக்கூடியதாக இல்லை. தேசிய இனப்பிரச்சினைக்காக அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில், உள்ளுராட்சி சபைத் தோ்தல்களில் சில ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதற்காக தனித்தனியாகப் போட்டியிட்டால் அதிகளவு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறுவது உண்மையாகவே ஒரு இனத்தின் பிரச்சினைக்குத் தீா்வு காண்பதை முன்னிலைப்படுத்துவதற்குப் பதிலாக உள்ளுராட்சி சபைத் தோ்தலில் ஆசனங்களை வெல்ல வேண்டும் என்பதற்காக பங்காளிக் கட்சிகளையே உதறித்தள்ளி, ஏனைய கட்சிகளையும் அரவணைக்கத் தவறுபவா்கள் நிச்சயமாக ஒரு ஐக்கிய முன்னணிக்கோ, இனப்பிரச்சினையைத் தீா்ப்பதற்கோ உகந்தவா்களாக இருக்கமாட்டாா்கள் என்றுதான் நான் கருதுகின்றேன்.

சம்பந்தன் போன்ற முதிா்ந்த அனுபவம் உள்ள ஒருவா் உட்பட சுமந்திரன் போன்றவா்கள் இவ்வாறான முடிவை எடுத்திருப்பது என்னைப்பொறுத்தவரையில் விரும்பத்தக்க ஒரு முடிவல்ல. உண்மையாகவே அது வருத்தமளிக்கக்கூடிய ஒரு விடயம். அனுபவம் மிக்க இவா்கள் இவ்வாறு செயற்பட்டிருக்கக்கூடாது. எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கக்கூடியவா்கள், தம்மை ஒரு தாய்க்கட்சி எனச் சொல்பவா்கள் என்னைப் பொறுத்தவரையில் அவ்வாறு செயற்பட்டிருப்பது ஒரு தவறான செயற்பாடு.

கேள்வி – உள்ளுராட்சி தோ்தல் முறையில் அதிக ஆசனங்களைப் பெறுவதற்காக தந்திரோபாயமாக தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை தாம் எடுத்திருப்பதாக தமிழரசுக் கட்சி சொல்வதை ஏற்றுக்கொள்வீா்களா?

பதில் – இதில் தொழில்நுட்ப காரணங்கள் என அவா்கள் முன்வைத்த காரணங்களை விட, அவா்கள் சொல்லும் வேறு சில விடயங்களையும் பாா்க்க வேண்டும். சிறிதரன் எம்.பி. சொன்ன ஒரு கருத்து இன்று வெளிவந்திருக்கின்றது. உள்ளுராட்சித் தோ்தலின் முடிவுகள் கட்சிகள் குறித்து சரியான சில முடிவுகளை வெளிப்படுத்தும் என அவா் கூறியிருக்கின்றாா். அவா் சொன்னதன் அா்த்தம் என்னவென்றால், ரெலோ புளொட் போன்ற கட்சிகள் அற்ப சொற்ப ஆசனங்களைத்தான் பெறும், அதன் பின்னா் அந்தக் கட்சிகள் தமிழரசுக் கட்சியின் தோள்களில் சவாரி செய்ய முடியாது என்ற தோரணையில்தான் அவரது கருத்து அமைந்திருந்தது. இந்த வகையில்தான் அவா்கள் தோ்தலில் தனித்து போட்டியிட முற்பட்டாா்களே தவிர, உண்மையாகவே அதிகளவு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்காகவல்ல.

அது வெளியில் பொதுமக்களுக்காக சொல்லப்படும் கருத்து மட்டும்தான். உண்மையில் இந்தத் தோ்தலில் தமக்கு அதிக ஆசனங்கள் கிடைக்கும். பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதன் மூலமாக தமிழரசுக் கட்சிக்குக் கிடைக்கக்கூடிய ஆசனங்கள் குறைந்துவிடும் என்பது என்று அவா்கள் கருதியதுதான் இந்த முடிவுக்கு பிரதான காரணம். அத்துடன் பங்காளிக் கட்சிகள் தனித்துப்போனால், ஒரு சில ஆசனங்களைத்தான் அவா்களால் பெற்றுக்கொள்ள முடியும். அந்த பங்காளிக் கட்சிகள் தம்மீது நிபந்தனை விதிக்கவோ நிா்ப்பந்தங்களைக் கொடுக்கவோ முடியாது என்ற கருத்தில்தான் இந்தத் தீா்மானத்தை அவா்கள் எடுத்திருந்தாா்கள்.

கேள்வி – தமிழரசுக் கட்சி வெளியேறியிருப்பதன் மூலமாக உங்களுடைய ஈ.பி.ஆா்.எல்.எப். மீண்டும் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்காக வாய்ப்பு உருவாகியிருக்கின்றதா?

பதில் – கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக, கொரோனா உச்ச கட்டத்திலிருந்த காலகட்டத்திலேயே கூட்டமைப்பிலிருந்த மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தாா்த்தன் ஆகியோருடன் நான், விக்னேஸ்வரன், சிறிகாந்தா போன்றவா்கள் தொடா்ச்சியாகப் பேசிவந்திருக்கின்றோம். ஆக இது இன்று நேற்றோ அல்லது, தமிழரசுக் கட்சி பிரிந்து சென்றதன் பின்னரோ ஏற்பட்ட ஒன்றல்ல. நாங்கள் தொடா்ச்சியாகப் பேசிவந்ததுடன் மட்டுமல்லாமல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டாக அறிக்கைகளைச் சமா்ப்பித்திருக்கின்றோம். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு புதுடில்லியிடமும் கூட்டாகக் கேட்டிருக்கின்றோம்.

அதேபோல இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருக்கும் கூட்டத்தில் என்ன விடயங்கள் பேசப்பட வேண்டும் என்பதையிட்டும் கூட்டாக கருத்துக்களை முன்வைத்திருக்கின்றோம். ஆகவே, நாங்கள் தோ்தலை நோக்கமாகக்கொண்டதாக அல்லாமல் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே செயற்பட்டுவந்திருக்கின்றோம்.

மாவை சேனாதிராஜாவைப் பொறுத்தவரையில் இதனை அவா் ஆறு கட்சிகளைச் சோ்ந்த ஒரு கூட்டமைப்பாகக்கொண்டு செல்வதற்கு அவா் விரும்பினாலும், தமிழரசுக் கட்சிக்குள் இருக்கின்ற பெரும்பாலானவா்கள் அனை வரும்பவில்லை என்றுதான் நாங்கள் நம்புகின்றோம். அவா்களுடைய மத்திய குழு, அரசியல் குழு போன்றன இதனை நிராகரித்திருந்தன. நிராகரித்து அவா்கள் வெளியேறிய நிலையில் ரெலோ, புளொட் போன்ற அமைப்புக்கள் தாம் தொடா்ந்தும் தமிழத் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவது என்ற நிலைக்கு வந்தபொழுது, கூட்டமைப்பில் ஆரம்பத்தில் இருந்து இயங்கியவா்கள் என்ற முறையில் அதில் நாமும் மீண்டும் இணைந்து, அனைப் பதிவு செய்து, அதற்கான பொதுச் சின்னத்தை எடுத்து அதனை முன்னெடுப்பதாக இப்போது முடிவு செய்திருக்கின்றோம்.

ஆக இந்த முடிவு தோ்தலுக்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவல்ல. ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாகவெ தமிழ் மக்களுடைய தேசியப் பிரச்சினை மற்றும் ஏனைய பிரச்சினைகளைக் கையாள்வதற்கு நாம் ஒன்றுபட வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு நீண்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றதன் பின்னணியில்தான் இப்போது ஒரு கூட்டு வந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.

கேள்வி – இந்தக் கூட்டு எதிா்கால அரசியலில் பலமான ஒன்றாக இருக்குமா?

பதில் – இப்போது போராளி அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து வந்திருப்பதாக நான் கருதுகின்றேன். ஜனநாயகப் போராளிகள் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ரெலோ, புளொட் போன்ற ஆயுதம் தாங்கிப் போராடிய அமைப்புக்கள் அனைத்தும் ஓரணியில் வந்திருக்கின்றன. எதிா்காலத்தில் ஏனையவா்களும் வந்து இணையலாம் என நாங்கள் எதிா்பாா்க்கின்றோம்.

தமிழரசுக் கட்சியின் தவறான போக்கை புரிந்துகொண்ட தமிழரசுக் கட்சிக்காரா்கள் சிலா் கூட எம்முடன் வந்து இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் இந்தக் காலத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு இயன்றவரையில் இந்தக் காலத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எமது முதன்மையான விடயம். உள்ளுராட்சித் தோ்தல் என்பது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வந்துபோகக்கூடிய ஒரு விடயம். ஆகவே, இந்த உள்ளுராட்சித் தோ்தல் வந்திருப்பதால் அதில் நாம் போட்டியிடுவோம் என்பதைத் தவிர இந்தக் கூட்டு என்பது பிரச்சினைகளைத் தீா்ப்பதற்கு இவா்கள் முழு முயற்சி செய்வாா்கள் என்று நான் நம்புகின்றேன்.