போராட்டம் 50 நாட்களை எட்டுகின்றது: ‘பிரச்சனையை தீர்த்துவையுங்கள்’ -கிராமமக்கள் கோரிக்கை

வவுனியாவில் அமைந்துள்ள ஸ்ரீநகர் கிராம மக்கள் தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறுகோரி முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 50 நாட்களை எட்டுகின்ற நிலையில் அவர்களால் இன்று துண்டுப்பிசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டது.

IMG20210329161030 01 போராட்டம் 50 நாட்களை எட்டுகின்றது: 'பிரச்சனையை தீர்த்துவையுங்கள்' -கிராமமக்கள் கோரிக்கை

குறித்தி துண்டுப்பிரசுரத்தில்,

‘எமது கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக எமது சனசமூகநிலைய முற்றத்தில் இரவு பகலாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்,காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கு.

வீடு அற்றவர்களுக்கு வீடு,வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களின் வீடுகளை

திருத்துவதற்கு உதவி,பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளிக் கட்டமைப்பு, விளையாட்டு மைதானம். கிராமத்தின் வடிகாலமைப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடிவருகிறோம்.

பிரதேச செயலாளர், உரிய திணைக்களங்களுடன் பேசி பிரச்சனைகளை பதினான்கு நாட்களுக்குள் முடிப்பதாக கூறிய போதிலும் இன்னும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது எமக்கு கவலையளிக்கின்றது. எமது கோரிக்கைகள் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளாக வழங்கப்பட்டு தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்ததன் விளைவாகவே நாங்கள் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

IMG20210329161327 01 போராட்டம் 50 நாட்களை எட்டுகின்றது: 'பிரச்சனையை தீர்த்துவையுங்கள்' -கிராமமக்கள் கோரிக்கை

தேர்தல் காலங்களில் எங்களுடைய கிராமங்களுக்குள் படையெடுக்கும் இவ் அரசியல்வாதிகள் ஒரு பக்கம் தமிழ், தமிழன் எனக் கூறிக்கொண்டு வாக்குகளை பெற்றுச் செல்லும் அதே நேரம் இன்னொரு தரப்பு அபிவிருத்தி, வீட்டுத்திட்டம் வேலைவாய்ப்பு என மக்களை நம்ப வைத்து ஏமாற்றி வருகிறது.

 அது மட்டுமன்றி இவர்களுக்கு வாக்களித்து விட்டு காலங்காலமாக எங்களால் ஏமாறமுடியாது. மேலும் வன்னி மாவட்டத்தில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களை விட வேறு யாரும் எங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது மக்களின் சரியான கோரிக்கைகளை கேவலப்படுத்துவதாகவும் இவ் அரசியல் அதிகார சக்திகள் மக்களை முட்டாள் ஆக்குவது போலவும் இருந்து வருகின்றது.

IMG20210329161117 01 போராட்டம் 50 நாட்களை எட்டுகின்றது: 'பிரச்சனையை தீர்த்துவையுங்கள்' -கிராமமக்கள் கோரிக்கை

 மேலும் இந்த விடயத்தில் எங்களுடைய கோரிக்கைகளை அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தி விட்டோம். ஆனால் முடிவு மட்டும் கிடைப்பதாக இல்லை. ஒவ்வொரு அதிகாரியும் ஒருவரை ஒருவர் பழிசுமத்தி விட்டு எங்களுடைய வரிப்பணத்தில் சம்பளத்தையும் சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறார்கள்.

நாம் கேட்கும் கோரிக்கையானது அரசினால் தீர்த்து வைக்கக் கூடியது. எனவே எங்களுடைய சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தையும் உரிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளையும் கேட்டு நிற்கின்றோம்”என்றுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரம் வவுனியா நகர் உட்பட பல்வேறு கிராமங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.