போராட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை உலகத்திற்கு நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் – அய்ய நாதன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் அய்ய நாதன் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

கேள்வி – போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவு கூரப்படும் இனப் படுகொலை நாளில் தமிழ் மக்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் – அங்கே ஈழத்திலே 2009ஆம் ஆண்டு, மே மாதம் 18ஆம் திகதியுடன் முடிவுற்ற, திட்டமிட்ட இன அழித்தல் போரில் மிகப் பெரிய அளவிற்கு, கணக்கில் சொல்லப் போனால், ஒன்றே முக்கால் இலட்சம் மக்களை ஒரு குறுகிய தொகுதிக்குள் வைத்து, அடைத்து, கொலை செய்த அந்த மாபெரும் குற்றச் செயல் இன்றளவும் எந்த விதமான நியாயமும் இன்றி, அவ்வாறே அந்த உண்மை புதைந்து கிடக்கிறது. புதைந்து தான் கிடக்கிறதே தவிர, அது அழிந்து போய் விடவில்லை. அழியவும் அழியாது. அதற்கான நியாயம் கேட்டுத் தான் தமிழினம், குறிப்பாக ஈழத் தமிழினம் புலம்பெயர்ந்த நாடுகளிலும், தாயகத்திலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

உலக வாழ்க்கையினுடைய முக்கியத்துவத்தை, மானுட வாழ்க்கையினுடைய அரசைப் பேணக் கூடிய அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், நீதிபதிகள், செயற்பாட்டாளர்கள், உரிமைப் போராளிகள் ஆகியோர் அனைவரும் அந்தப் படுகொலையை ‘திட்டமிட்ட இன அழித்தல்’ என்று தயங்காமல் சொல்லி வருகின்றனர். ஆனால் நாடுகள் நியாயத்தை விட, அரசை விட இப்படிப்பட்ட ஒரு கொடூர செயலைச் செய்த அந்த அரசை, அதற்குத் துணையாக நின்ற அரசுகளை தண்டிக்க வேண்டும். அது தான் இன அழித்தல் இதற்கு மேலும் நிகழாத அளவிற்கு தடுப்பதற்கான ஒரு சரியான வழி என்பதை உணராமல், தங்களுடைய நாட்டின், அரசின் நலனை முன்வைத்து எல்லாவற்றையும் பார்க்கின்றனர். இதைத் தான் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 2008ஆம் ஆண்டு பேசிய மாவீரர்தின உரையில் குறிப்பிட்டார்.

“இந்த உலகத்தினுடைய சர்வதேச ஒழுங்கமைப்பு என்பது, பெருமளவிற்கு பொருளாதார நலன் சார்ந்ததாகவும், அரசியல் சார்ந்ததாகவும், ஆதிக்கம் சார்ந்ததாகவும் இருப்பதால், நமது போராட்டத்தினுடைய நியாயத்திற்கு உரிய இடமும், முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. அதுவே இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு நிலையை நாம் எதிர்கொள்வதற்கு அடிப்படைக் காரணமாகின்றது” என்று சொன்னார். அவர் கூறியது மிகமிக முக்கியமானது. ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

இப்படியான ஒரு போருக்கான அடிப்படைக் காரணமே சிங்கள, பௌத்த இனவாதம் தான். இலங்கையினுடைய பூர்வீகக் குடிமக்களாகிய தமிழர்கள் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து ஒரு இனத் துவேசத்தைக் கிளப்பி விட்டு, அதை மதவாத வழியில் கொண்டு சென்று, சிங்கள மக்களை ஒருங்கிணைத்து, அதன் மூலம் சிங்கள பெரும்பான்மையின பலத்தாலான அரசைக் கொண்டு, தொடர்ந்து தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அந்த அடக்குமுறை, இன அழித்தல், இன ஒடுக்கல் கொள்கை, அதை நிறைவேற்ற உச்சபட்சமாக அது நடத்திய அந்த இன அழித்தல் போர், அதில் அழிந்த இவ்வளவு பேர். இவை அனைத்திற்கும் காரணம் இந்த சர்வதேச ஒழுங்கமைப்பு.

தனது பொருளாதார, அரசியல் நலன்களுக்காக நியாயத்தைக் காண மறுத்தது தான், அது எல்லா நாடுகள் என்று நாம் பொதுவாக சொன்னாலும்கூட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசிற்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தையை நாங்கள் முன்னெடுத்து, ஒரு சமாதானத் தீர்வை கொண்டு வருவோம் என்று சொன்ன நாடுகளுக்கே இப்படிப்பட்ட உள்நோக்கம் இருந்து தான் அவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது பல்வேறுபட்ட ஆதாரங்களிலிருந்து தெரிகிறது.  அப்படிப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தான் கிரீடம் அமையும் என்ற புத்தகத்தையே நான் எழுதினேன். எவ்வாறு ஒரு பேச்சுவார்த்தை என்கின்ற பாதை இன அழித்தல் என்கின்ற ஒரு கொடூரமான முடிவிற்கு கொண்டு செல்லப்பட்டது என்பதை ஆழமாக எழுதினேன்.

அந்த பேசும் ஆதாரங்கள், இன்றைக்கு அதில் ஈடுபட்டவர்கள் பேசக்கூடிய அந்தத் தொனியும் நமக்கு அதை உறுதி செய்கிறது. எனவே நியாயத்திற்காக போராடக்கூடிய நமது போராட்டம் இன்றைக்கு பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சொல்கின்றீர்கள். நியாயத்திற்கான போராட்டத்திற்கு ஏது கால இறுதி. நியாயத்திற்கான போராட்டம் வெல்வதற்கான ஒரு சூழ்நிலை வரும்வரை நியாயத்திற்கான போராட்டம் தொடர்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

போர் நடந்த போது அந்தப் போரை எப்படி முடிவிற்குக் கொண்டு வருவது? எப்படி மக்களைக் காப்பாற்றுவது என்பது குறித்து ஆராய்ந்த போது அப்பொழுது இந்திய நாடாளுமன்றத்தினுடைய தலைசிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்த இரா.செழியன் என்னை அழைத்துப் பேசினார். நாம் எதிர்பார்க்கக் கூடிய விடுதலை அவ்வளவு சாதாரணமாகக் கிடைத்து விடாது. இந்தப் போரின் மூலம் நம்மால் இதை சாதித்து விடவும் முடியாது. ஏனென்றால், நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள். இந்தியா தனது விடுதலைக்காக 1801ஆம் ஆண்டு முதல் போராடியது. ஆனால் விடுதலை வந்ததோ 1947ஆம் ஆண்டு. 150 ஆண்டுகளுக்குப் பிறகு.   ஆனால் இலங்கை எந்த இடத்தில் போராட்டம் நடத்தியது. ஆனால் அதற்கும் தான் விடுதலை கிடைத்தது. இதை நாம் சொல்வதற்குக் காரணம், சர்வதேச சூழல் மாறும் பொழுது நாம் கடினமாக போராடிய ஒரு இலக்குக்கூட மிக எளிதாக அமைந்துவிடும் என்று செழியன் சொன்னார். இதை நீங்கள் எடுத்துக்கூறுங்கள் என்று சொன்னார்.

அதைத் தான் இந்த நேரத்திலும் உங்ளுக்கு நினைவு கூர்ந்து உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நாம் நடத்துகின்ற இந்தப் போராட்டங்கள் பயனற்றவை என்று தயவு செய்து ஒருபோதும் நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு போராட்டமும் ஆழ்ந்த பொருளுடையது. ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. உரிய பயனைத் தரக்கூடியது. இதில் மாறுபட்ட கருத்தே இல்லை. நான் வெறும் அரசியல் மேதைகளை நம்பி எதையும் பேசக் கூடியவன் அல்ல. நான் இறை நீதியை மறுப்பவனும் அல்ல. ஏனென்றால், அது ஒவ்வொரு கணத்திலும் நமது விதியையும் தாண்டி நம்மை வழி நடத்தக் கூடிய ஆற்றல் உள்ளது.

எனவே தான் நான் சொல்கின்றேன். நாம் நடத்தக் கூடிய இந்தப் போராட்டங்கள் உரிய பயனைத் தரவில்லையென்று, எவ்வளவு நாள் போராடுவது என்று எண்ணாதீர்கள். ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு போராட்டம் கொண்டு செல்லப்பட்டது தான் இந்தியப் போராட்டம் வெற்றி பெற்றதற்கு அடிப்படைக் காரணம். அடுத்த தலைமுறைக்கு இந்தப் போராட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும். நியாயத்தை, அதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

இன்றைக்கு நாம் பல இலட்சக் கணக்கில் பல்வேறு நாடுகளில்  வாழலாம்.  கனடாவிலிருந்து ஆரம்பித்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து வரை வாழ்கிறோம்.  ஆனால் நமக்கென்று இருக்கக் கூடிய அந்த நாட்டில் சொந்த இன மக்கள் எப்படிப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள் என்று நாங்கள் மறக்க முடியுமா?  அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற அந்தக் கடமையில் இருந்து தான் நாம் வெளியேற முடியுமா? இது தான் இங்கே இருக்கக் கூடிய கேள்வி. அதற்காகத் தான் போராடுகிறோம்.

இத்தனை ஆயிரம் போராளிகள் தங்கள் இன்னுயிரை, இளமையை, படிப்பை, வாழ்வை, இன்பத்தை எல்லாம் துறந்து நின்று தியாகம் செய்தார்களே. அவர்களைத் தானே நினைவு கூருகின்றோம். அப்படிப்பட்ட தியாகிகள் எல்லாம் இப்படிப்பட்ட ஒரு எதிர் காலத்திற்காகத் தானே, விடுதலைக்காகத்தானே, சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகத் தானே அவர்கள் போராடினார்கள்.

எனவே அப்படிப்பட்ட அந்தப் போராட்டத்தினுடைய இலக்கான தமிழீழ விடுதலை என்கின்ற ஒன்றை அடையும் வரை – எட்டும் வரை நமது வாழ்வின் ஒரு அங்கமாக போராட்டமே இருக்க வேண்டும். போராட்டமே நமது வாழ்க்கை என்று சொல்லக் கூடிய வகையில் வாழ்ந்திட வேண்டும். ஏதோ ஒரு வெளியில் இருந்து பேசுகின்றார் என்பது அல்ல. மனப்பூர்வமாக உங்களோடு மிகப் பெரியளவில் நான் ஈடுபட்டவன். தொடர்பு பூர்வமாக, அரசியல் பூர்வமாக உங்களோடு சேர்ந்து இணைந்து வாழ்ந்தவன். வாழுகின்றவன். எனவே நமக்குள் எந்த வித்தியாசம், வேறுபாடும் கிடையாது.

கருத்துக்கள் எப்போதும் மாறுபட்டிருக்கும். ஆனால் அது நமது போராட்டத்தினுடைய இலக்கை நோக்கிச் செல்லக்கூடிய அந்தப் பாதையில் ஒரு இடையூறாக அமைந்து விடக் கூடாது.  அது தான் தமிழினத்திற்கு இருக்கக் கூடிய ஒரு மிகப் பெரிய நெருக்கடியாக கருதுகிறேன்.

இன்றைக்குகூட அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் அங்கு நடந்தது இன அழிப்புத் தான். அதை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று பேசியிருக்கின்றார். இப்படியான குரல்கள் பல்கிப் பெருக வேண்டும். நாம் அரசுகளையே வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். மக்களிடம் வலியுறுத்த வேண்டும். மக்கள் அவர்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்த வேண்டும். அந்தந்த பிரதிநிதிகளின் வாயிலாக அந்தந்த நாட்டின் மக்களவையில், பிரதிநிதிகள் சபையில் அது எதிரொலிக்க வேண்டும்.

ஏனென்றால், இந்த இடத்தில் ஈழத்தில் நடந்த அந்த இன அழிப்பிற்கு இந்த உலகம் நீதி காணத் தவறினால், அதன் பின்னர் ஒவ்வொரு நாட்டிலும் இது நடக்கும். அதை தடுக்க முடியாது. மானுடத்தினுடைய ஒட்டுமொத்த அழிவிற்கு வித்திடும். அதையும் தடுக்க முடியாது. ஆனால் அப்படியெல்லாம் நடக்கப் போவதுமில்லை. இளையோர் அதை அனுமதிக்கப் போவதுமில்லை. நாமும் விடப்போவதுமில்லை.

எனவே இந்த இன அழிப்பைப் பொறுத்தவரைக்கும் நாம் பேச வேண்டியது, நாம் செய்ய வேண்டியது எல்லாமே நம்முடைய போராட்டத்திற்கான நியாயம் என்பது எங்கள் போராட்டத்தில் நாங்கள் எவ்வளவு பேரை இழந்தோம் என்பதற்கான நீதி கிடைப்பதில் தான் தொடங்குகிறது. இதை ஏதோ புதிதாக நான் சொல்லவில்லை. ஐ.நா. பொதுச் செயலாளரான பான் கீ மூன் சொன்னார். நீதிக்கு முன் நியாயம் என்றார். நியாயத்தை நிலைநிறுத்தாமல்  நியாயத்தை நிலைநிறுத்தாமல் அங்கே அமைதி ஏற்படாது. அதனால் தான் அமைதியற்ற ஒரு பூமியாக அது இருக்கின்றது. பொருளாதார ரீதியாகவும் அழிந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னார்.

எனவே எனது மக்களே!  நாம் அனைவரும் இந்தப் போராட்ட வாழ்க்கையை ஒருபோதும் ஒரு சுமையாகக் கருதவே கூடாது. இந்தப் போராட்டத்தை எவ்வளவு ஆழமாக நாம் முன்னெடுக்கின்றோம்? இது ஒரு தனிமனிதப் போராட்டத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. சமீபத்தில் நமது சகோதரி ஒருவர் லண்டனில் நடத்திய அந்தப் போராட்டம் பலரின் கண்களைத் திறந்தது. ஒரு ஒற்றைக் கருத்தை நோக்கிய ஒரு போராட்டம். அது தான் அங்கே முக்கியம். அது ஒரு பெரும் வெற்றி. அப்படியான செயல்களில் தான் நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டும். தனி மனிதர்கள் அளவிலும், குழந்தைகள் அளவிலும், கதைகளாக நாம் சொல்லும் அளவிலும், இதர நாட்டினரோடு நாம் பேசக்கூடிய அளவிலும் தான் இதை வெளிப்படுத்த முடியும். இந்த இன அழிப்பை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றீர்களே? அதனால் தானே உங்கள் நாடும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது. அப்போது நியாயம் என்பது எப்படிக் கிடைக்கும். என்பதையெல்லாம் வலியுறுத்திப் பேசும் போது தான் நமக்கான தீர்வை நோக்கி நாம் உள்ளபடியே போராடுகின்றோம் என்று கூறலாம். ஒவ்வொரு தடவையும் ஒட்டுமொத்தமாக ஒரு இடத்தில் கூடி நடத்தக்கூடிய போராட்டம் தான் போராட்ட வாழ்க்கை என்பது ஒரு குறையான புரிதல் தான்.

எனவே நாம் தொடர்ந்து போராடுவோம். இந்த நாளைப் பொறுத்தவரைக்கும் நாம் ஏற்கனவே உறுதி எடுத்துக் கொண்டது போல, நாம் இதற்கு மேல் உறுதியாகத் தான் போராடப் போகின்றோம். தமிழீழ விடுதலை என்பது நமது அரசியல் அபிலாசை. நியாயபூர்வமானது. மானுடபூர்வமானது. பிறவிபூர்வமானது. எனவே இந்த இடத்திலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை உலகத்திற்கு நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். நாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை உயர்த்திப் பிடிப்பதற்கும் காரணம் அதுதான்.  எனவே அந்தப் பாதையிலிருந்து நாம் பின்வாங்காமல் தொடர்ந்து முன்னேறுவோம்.