பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்பட பிரித்தானியா தயார்- அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறுதல் நீதி மற்றும் மனித உரிமை விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க உதவுவதற்கு தயார் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரித்தானியாவின் அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு கூறுகையில்,

பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கையுடன் ஆக்கபூர்வமான விதத்தில் இணைந்து செயற்படுவதற்கு பிரித்தானியா தயாராகவுள்ளது.

முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்வில் இலங்கை உட்பட பல நாடுகள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில்  இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதை வரவேற்கிறோம்.

இந்த தீர்மானம் யுத்தத்திற்கு பிந்தைய பொறுப்புக்கூறல் நீதிக்கான சர்வதேச சமூகத்தின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது .

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் ஆழ்ந்த கவலையை வெளியிடும் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதத்தில் இந்த தீர்மானம் காணப்படுகின்றது.   இலங்கையில் மீண்டும் கடந்தகாலத்தின் மோசமான மீறல்கள் இடம்பெறலாம் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஐநா இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிப்பதும் எதிர்கால பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளிற்காக ஆதாரங்களை சேகரிப்பதும் சரியான விடயம்” என்றார்.