Tamil News
Home செய்திகள் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த புதிய தீர்மானம் அவசியம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த புதிய தீர்மானம் அவசியம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் தற்போது மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் ஏற்ற வகையிலான புதியதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து நிறைவேற்றவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதை அடுத்து மனித உரிமைகள் பேரவையால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

“எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, அதன் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைவாக செயலாற்றுவது அவசியமாகும்.

இலங்கையில் தற்போது மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கும் ஏற்றவகையிலான புதியதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றவேண்டும்.

இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய மீறல்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை எடுக்கவேண்டும் என்றும் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் 2015 ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் விலகுவதாக அறிவித்ததுடன் அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டுவதிலும் பொதுவான புறக்கணிப்பை வெளிப்படுத்தியது.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்கள் மற்றும் மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் வகையில் மனித உரிமைகள் பேரவை செயல்படவேண்டும். இதுவிடயத்தில் உரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கென ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்குப் பலதடவைகள் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களையும் வலுவற்ற குழுக்களையும் பாதுகாப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக மாறியிருக்கிறது. கடந்த 2009 மேமாதம் முடிவிற்கு வந்த இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின்போது இருதரப்புமே பாரிய மீறல்களைப் புரிந்ததுடன் அதன்விளைவாகப் பெரும் எண்ணிக்கையான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

இவை போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர்களால் இனங்காணப்பட்டது. எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகையைத் தொடர்ந்து மேற்படி மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட பல உயர் அதிகாரிகள் மீண்டும் அரசாங்கத்துக்குள் உள்வாங்கப்பட்டனர்.

இவை தொடர்பில் விசாரணை செய்வதற்காகக் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

எனினும் கடந்த காலங்களில் பல்வேறு ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும், அவை உண்மையைக் கண்டறிவதிலிருந்தும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதிலிருந்தும் தவறியிருக்கின்றன என்று ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமளிக்காத வகையிலான மிகத்தெளிவான அறிக்கையொன்றையே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைத்திருக்கின்றார். ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் ஒன்றிணைந்து இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கும் ஏற்றவாறான வலுவானதொரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version