பொத்துவில் – பொலிகண்டி பேரணி: யோகேஸ்வரனிடமும் பொலிஸார் விசாரணை

 

நீதிமன்ற உத்தரவை மீறி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டேன் என்று கூறி மட்டக்களப்பு பொலிஸார் தம்மிடம் விசாரணைகளை மேற்கொண்டனர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது அலுவலகத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தரால், முல்லைத்தீவின் மாங்குளம் பொலிஸ் பிரிவினரால், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு கடந்த 6ஆம் திகதியன்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நீதிமன்றக் கட்டளை எனக்கு வழங்கப்பட்டது என்றும் ஆனால், நான் அதனை மீறி அந்தப் பேரணியில் கலந்துகொண்ட ஒளிப்பதிவுகள் தங்களிடம் உள்ளன எனவும் கூறி என்னிடம் வாக்குமூலம் கோரினர்.

அதற்கு பதிலளித்த நான் “இந்த நாடு ஜனநாயக நாடு. எனக்கிருக்கும் ஜனநாயக உரிமைகளின் அடிப்படையில் இவ்வாறான சாத்வீகப் போராட்டங்களில் நான் கலந்துகொள்ளச் சென்றது உண்மைதான். ஆனால், மாங்குளம் பொலிஸார், மாங்குளம் ரயில் கடவையை அண்மித்ததாக வைத்து நான் மட்டுமே வந்த எனது வாகனத்தை மறித்து, அந்த நீதிமன்றக் கட்டளையை வழங்கினார்கள்.

அதனை வழங்கிய பின், எனது பெயர் அக்கட்டளைப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்படாவிடினும்கூட, நீதிமன்றத்தின் கௌரவத் தன்மையை மதித்து, தொடர்ந்து அப்பேரணியில் செல்வதை நிறுத்திக்கொண்டு, நான் மட்டக்களப்புக்கு திரும்பிவிட்டேன் என்று தெளிவுபடுத்தினேன்” என்றார்.