Tamil News
Home செய்திகள் பொத்துவில் பொலிகண்டி பேரணி வழக்கு தொடர்பாக உத்தரவு வழங்க மே 18வரை தடை!

பொத்துவில் பொலிகண்டி பேரணி வழக்கு தொடர்பாக உத்தரவு வழங்க மே 18வரை தடை!

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் பி2பி தொடர்பான வழக்கிற்கு எவ்வித உத்தரவுகளையும் கட்டளைகளையும் மே 18 வரை வழங்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் – பொலிகண்டி பேரணி தொடர்பாக கல்முனை பொலிசாரால் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட எழுத்தாணை மனு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரரான அ.நிதான்சன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.எம்.சுமந்திரன் முன்னிலையாகி திறமையான சமர்ப்பணங்களை செய்தார்.

அதனை அடுத்து கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று 30.04.2021 நடைபெறவிருக்கும் வழக்கிற்கு எவ்வித உத்தரவுகளையும் மே 18 வரை வழங்க கல்முனை நீதவான் நீதிமன்றத்துக்கு முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (30)வெள்ளிக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு இடம்பெறவிருக்கின்ற நிலையில் இவ்வுத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் போது நீதிமன்ற தடை உத்தரவினை மீறியதான வழக்கினை கல்முனை நீதிமன்றம் விசாரணை செய்ய முடியாது என மேன் முறையீட்டு நீதிமன்றில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் செய்த மேன்முறையீடு ஏற்கப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் இரா.சாணக்கியன் த.கலையரசன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் சீ.யோகேஷ்வரன் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் தமிழ்மாணவர் மீட்பு அணி தலைவர் செல்வராசா கணேஷ்ஆகிய ஏழுபேருக்கு எதிராக கல்முனை பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version