Tamil News
Home செய்திகள் பொதுத்தேர்தலை நடத்துங்கள் – ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

பொதுத்தேர்தலை நடத்துங்கள் – ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுப்பற்று உண்மையாக காணப்படுமாயின் அவர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். மக்களாணை இல்லாத இந்த அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என மக்கள் பேரவை சபையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தற்போது பாரிய போராட்டம் காணப்படுகிறது. தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் தேர்தலை பிற்போட அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தற்போது பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைகளினாலும்,உள்ளூராட்சிமன்றங்களினாலும் அரச செலவுகள் மாத்திரம் மிகுதியாகுகின்றதே தவிர நாட்டுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தி 8000 உறுப்பினர்களை தெரிவு செய்வதால் அரச கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுப்பற்று உண்மையாக காணப்படுமாயின் அவர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த வேண்டும். இந்த பாராளுமன்றத்திற்கு மக்களாணை சிறிதேனும் கிடையாது.நாட்டு மக்கள் 225 உறுப்பினர்களையும் திருடர்கள் என கடுமையாக விமர்சிக்கிறார்கள். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மக்களின் ஆதரவு அவசியம்,ஆகவே பாராளுமன்றத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும்.

மக்களாணை இல்லாத இந்த அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இந்த மாதம் கிடைக்கும் என அரசாங்கம் குறிப்பிடுவதை நம்ப முடியாத நிலை தான் உள்ளது என்றார்.

Exit mobile version