பேரினவாதிகளின் தாக்குதல்களால் முஸ்லீம்களின் 540 சொத்துக்களும், 100 வாகனங்களும் சேதம்

புனித ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல்களுக்கு பின்னர் சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை பிரகடனப்படுத்தியபோதும் சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் 540 வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் கடைகளும் 100 இற்கு மேற்பட்ட வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக அல்ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குருதி தோய்ந்த நிலையில் கணவரை நான் எனது மடியில் வைத்திருந்தேன். சிங்களக் காடையர்கள் அவரை வாளால் வெட்டிய பின்னர் பெற்றோலை அவரின் முகத்தில் ஊற்றியிருந்தனர்.

தலையிலும், கழுத்திலும் இருந்து குருதி பெருகியது, அவர் தனது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தார், அதனை எனது மூன்று பிள்ளைகளும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனங்களை கொண்டுவருமாறு நான் கத்தினேன், ஆனால் அதனை மூன்று காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனரே தவிர உதவிக்கு வரவில்லை என ஜிபிரியா அமீர் தெரிவித்துள்ளார்.

புனித ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை பிறப்பித்திருந்தபோதும் சிங்கள காடையர்கள் இலங்கையின் மேற்கு பகுதியில் மேற்கொண்ட தாக்குதல்களில் 540 வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் கடைகளும் 100 இற்கு மேற்பட்ட வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

வாள்கள், கற்கள், பெற்றோல் குண்டுகள் மற்றும் தடிகளுடன் வந்த சிங்களக் காடையர்கள், தாக்குதல்களிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் காயமடைந்திருந்தனர்.

கடந்த 30 வருடங்களில் சிறீலங்காவின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் தற்போது மேற்கில் இடம்பெற்றுள்ளது.

2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பினனர் முஸ்லீம் இனத்திற்கும் 75 விகிதத்தை பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கள இனத்திற்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்துச் செல்கின்றது.

கடந்த வருடமும் பொளத்த காடையர்களால் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருந்தன.

சிறீலங்கா படையினர் பாதுகாப்புக்களை வழங்கிவரும் போதும் தாங்கள் பாதுகாப்பு அற்ற நிலை ஒன்றை உணர்வதாக முஸ்லீம்களும், சிங்களவர்களும் தெரிவிக்கின்றனர்.

முஸ்லீம்களால் தாக்கப்படலாம் என சிங்களவர்களும், சிங்களவர்களால் மீண்டும் தாக்கப்படலாம் என முஸ்லீம்களும் அச்சத்துடன் வாழ்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.