Tamil News
Home செய்திகள் பேராயர் மல்கம் ரஞ்சித் சிங்கள கிறிஸ்தவர்களின் ஆண்டகையா? பாராளுமன்றத்தில் சிறிதரன்

பேராயர் மல்கம் ரஞ்சித் சிங்கள கிறிஸ்தவர்களின் ஆண்டகையா? பாராளுமன்றத்தில் சிறிதரன்

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்காக பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஏன் இதுவரையில் நீதியான விசாரணை ஒன்றைக் கோரவில்லை எனக் கேள்வி எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி . எஸ்.சிறிதரன், பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் சிங்கள கிறிஸ்தவர்களுக்கான ஒரு ஆண்டகையாகவே செயற்படுவதாகவும் இது தமிழ் மக்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி,இறக்குமதி தொடர்பான சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கீழ்தரமாக விமர்சித்திருந் தார். மதமொன்றின் தலைவராக இருந்துக்கொண்டு கர்தினல் உதிர்க்கும் வார்த்தைகள் பலர் புருவங்களை உயர்த்திப் பார்க்குமளவுக்கு உள்ளது.

வடக்குக், கிழக்கு தமிழர்கள் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்திருந்த அண்மையில் காலமான மன்னார் மறைமாவட்ட ஆயர் இ ராயப்பு ஜோசப் .வன்னி இறுதி யுத்தத்தில் 146000 மக்கள் கொல்லப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டோ உள்ளதாக புள்ளிவிபரங்களுடன் கூறியிருந்தார். ஆனால் பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பான நீதி விசாரணை வேண்டுமென ஏன் இதுவரையில் கோரவில்லை ?

எனவே கர்தினல் சிங்கள கிறிஸ்தவர்களுக்காக மட்டுமே பேசுகின்றார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களில் தமிழ் கிறிஸ்தவர்களே அதிகளவில் உள்ளனர். அதேபோன்று இறுதி யுத்தத்திலும் பல கிறிஸ்தவமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். எனவே அனைவருக்காகவும் அவர் குரல் கொடுக்க வேண்டும். ஒரு மதத்தின் ஆண்டகையாக இருந்து கொண்டு ம் ஒரு இனத்துக்கு மட்டும் குரல் கொடுக்கக்கூடாது. இறுதி யுத்தத்தால் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் கர்தினல் இதுவரையில் குரல் கொடுக்காமல் இருப்பது தமிழர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நான் பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அவர் ஒரு மதத்தின் தலைவராக இருந்துகொண்டு ஒரு இனத்துக்கு மட்டும் குரல் கொடுப்பது நியாயமல்ல என்றே கூறுகின்றேன்” என்றார்.

Exit mobile version