Tamil News
Home செய்திகள் பேராபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் – ஆனந்தன்

பேராபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் – ஆனந்தன்

பேராபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் தீர்க்கமான நடவடிக்கைக்கு அனைத்து தரப்பும் ஒத்துழையுங்கள் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க அழைப்பு.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொது செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் குறித்த தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடளாவிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக் கைதிகள் கொரோனா வைரஸின் பரவலால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, மகசீன் சிறைச்சாலைளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 74பேர் வரையிலான தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் ஆபத்துக்குள் சிக்கியுள்ளனர். இந்த சிறைச்சாலையில் உள்ள சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்றுகுறித்த சந்தேகம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகள் பலரே ஒவ்வொரு சிறைக்கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுகாதார பாதுகாப்பு தொடர்பிலும் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாதுள்ளது. ஆகவே அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்விதமான உறுதிப்பாடுகளும் அற்ற நிலையிலேயே சிறைக்கூடங்களில் உள்ளார்கள்.

தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்தவரையில் தண்டனைக்கும் அதிகமான காலத்தினை சிறைச்சாலைகளிலேயே கழித்துவிட்டனர். அவர்களின் விடுதலையை மாறிமாறி வரும் ஆட்சியாளர்கள் அரசியலுக்காகவே பயன்படுத்திவருகின்றனர்.

தற்போது ஆபத்தானதொரு அவசரநிலைமை நாட்டில் நிலவுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் ஆகக்குறைந்தது அவர்களுக்கு தற்காலிக பிணை அனுமதியுடன் சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்காகவாவது அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் விசேட கவனம் எடுக்க வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற ஜனாதிபதி அவர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக கூறியிருந்தார். விசேடமாக பிரதமரின் புதல்வர் சிறைக்குச் சென்ற தருணத்தில் தமிழ் சிறைக் கைதிகளின் அவலத்தினை நேரில் பார்த்ததாக கூறுகின்றார்.

ஆகவே மேசமான அவலங்களுக்குள் சிக்குண்டிருக்கும் அவர்களின் நிலைமைகளை உணர்ந்து உடன் நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகின்றது. இந்த விடயத்தில் எதிர்த்தரப்புக்கள் அனைத்தும் கூட்டிணைந்து செயற்படவேண்டியதும் அவசியமாகின்றது என்றுள்ளது.

Exit mobile version