பேரறிவாளனின் பரோல் டிசம்பர் 7 வரை நீடிப்பு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோல் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த 29 வருடங்களுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சிறுநீரகத் தொற்றுக் காரணமாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 90 நாட்கள் பரோல் கோரி அவரின் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியிருந்தது. இது நவம்பர் மாதம் 9ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில், மேலும் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு நவம்பர் 23ஆம் திகதி வரை பரோல் நீடிக்கப்பட்டது. பின்னர் நவம்பர் 23ஆம் திகதி 2ஆவது முறையாகவும் பேரறிவாளனின் பரோலை 1 வாரம் நீடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு மேலும் 90 நாட்கள் பரோலை நீடிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று(27) விசாரணைக்கு வந்தது.

சிகிச்சைப் பெறுவதற்கு மேலும் 4 வாரமாவது பரோல் தேவைப்படுகின்றது. எனவே 4 வாரங்கள் பரோல் நீடிக்கப்பட வேண்டும் என பேரறிவாளன் வழக்கறிஞர் கோரியிருந்தார், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் பேரறிவாளனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பரோலோடு கூடுதலாக ஒரு வாரத்திற்கு நீடித்து உத்தரவிட்டனர். பரோலை நீடிப்பது இது தான் கடைசித் தடவை எனவும், இதற்கு மேல் நீடிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கமைவாக பேரறிவாளனின் பரோல் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.