Tamil News
Home உலகச் செய்திகள் பெய்ரூட் வெடிவிபத்து: பிரதமர், அமைச்சர்கள் பதவி விலகல்

பெய்ரூட் வெடிவிபத்து: பிரதமர், அமைச்சர்கள் பதவி விலகல்

பெய்ரூட்டில் நடைபெற்ற வெடிவிபத்திற்கு பொறுப்பேற்று பல அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து லெபனான் பிரதமர் ஹசன் டயப் தனது பதவியை இராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 6 ஆண்டுகளாக பெய்ரூட் துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் அளவான அமோனியம் நைத்திரேட் வெடித்ததில் 200இற்கும் அதிகமானவர்கள் பலியானதுடன், 6ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். 3 இலட்சம் பேர் வரையில் வீடுகளை இழந்துள்ளனர். இவர்கள் தற்போது பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த வெடிவிபத்தை அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவராக இராஜினாமா செய்து வருகின்றனர். நீதித்துறை அமைச்சர் மரியா கிளாடி நஜிம், பொருளாதாரத்துறை அமைச்சர் வஸ்னி, தகவல்துறை அமைச்சர் மானல் அப்தெல், சுற்றுச் சூழல் மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் டாமினஸ் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர். அவர்களுடன் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து லெபனான் பிரதமர் ஹசர் டயப் தனது பதவியை இராஜினாமா செய்ய இருப்பதாகவும், அது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே லெபனான் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. அத்துடன் இந்த வெடிவிபத்தின் மூலம் அதன் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version