Home ஆய்வுகள் பெண்ணியத்தை முதலாளித்துவம் அடிவருடியாக்கியது எப்படி?-தமிழில் ந.மாலதி

பெண்ணியத்தை முதலாளித்துவம் அடிவருடியாக்கியது எப்படி?-தமிழில் ந.மாலதி

முதலாளித்துவத்தின் சுரண்டல்களை கடுமையாக விமர்சித்தே ஆரம்பித்த பெண்ணிய இயக்கம் முதலாளித்துவத்திற்கும் அதன் தற்கால வடிவமான நவதாராளவாதத்திற்கும் ஆதரவான சில சிந்தனைகளை இன்று உருவாக்கி கொடுத்திருக்கிறது.

ஒரு பெண்ணியவாதியாக நான் பெண்களின் விடுதலைக்கு போராடும்போது, ஒரு சிறப்பான உலகத்திற்காக சமத்துவமான, நீதியான, சுதந்திரமான உலகத்திற்காக போராடுகிறேன் என்றே நம்பினேன். ஆனால் பெண்ணியவாதிகளால் உருவாக்கப்பட்ட கருத்துக்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட தேவைகளுக்கு உதவுகிறது என்ற கவலை இப்போது எனக்கு வருகிறது. அன்று நாம் பாலியல் அடக்குமுறைகளுக்கு எதிராக உருவாக்கிய விமர்சனங்கள் இன்று புதிய வடிவிலான சுரண்டல்களுகளை நியாயப்படுத்துவதற்கு கையாளப்படுகின்றன.

கொடுமை என்னவென்றால், பெண்களின் விடுதலை இயக்கம் இன்று நவதாராளவாதத்தின் சுதந்திர-வர்த்தக சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் சிக்கி ஒரு ஆபத்தான கூட்டாக கைகோர்த்து இயங்குகிறது. இதனாலேயே, அன்று ஒரு முற்றிலும் மாறுபட்ட உலக பார்வையை கொண்டிருந்த பெண்ணிய இயக்கம், இன்று தனிநபர் நன்மைகளை முன்னிறுத்துகிறது.

தொழில்சார் முன்னேற்றத்தை (careerism) முன்னிறுத்தும் சமூகத்தை அன்று விமர்சித்த பெண்ணியவாதிகள், இன்று பெண்களை தொழிலில் முன்னேறும்படி அறிவுரை கொடுக்கிறார்கள். அன்று சமூக கூட்டொருமையை மேலாக கருதிய இயக்கம் இன்று பெண் தொழிலதிபர்களை கொண்டாடுகிறது. அன்று மற்றவர்களின் நலத்தில் கரிசனை கொள்வதை மேன்மையாக கருதிய பார்வை இன்று தனிநபர் முன்னேற்றத்தையும் தனிநபர் திறமையையும் கொண்டாடுகிறது.

பெண்ணிய கருத்துக்களின் இம்மாற்றங்களின் பின்னால் முதலாளித்துவம் செயற்படுவதில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் இருக்கின்றன. இரண்டாம் உலக போருக்கு பின்னரான அரசினால் நெறிப்படுத்தப்பட்ட முதலாளித்துவம் மறைந்து இன்று அது புதிய வடிவத்தை எடுத்திருக்கிறது. இது அரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே, உலமயமாக்கல் சூழலில் வடிவெடுத்திருக்கும் நவதாராளவாதம். இரண்டாம் அலை பெண்ணியம் என்று அழைக்கப்படும் 60களில் தோன்றிய பெண்ணியம் முதலாளித்துவத்தின் முதலாவது வடிவத்தை, அதாவது அரச முதலாளித்துவத்தை, விமர்சித்து வளர்ந்தது. ஆனால் இன்று அது முதலாளித்துவத்தின இரண்டாவது வடிவத்திற்கு, நவதாராளவாத்திற்கு, அடிமையாகி விட்டது.file 20180306 146655 1tmc0oa பெண்ணியத்தை முதலாளித்துவம் அடிவருடியாக்கியது எப்படி?-தமிழில் ந.மாலதி

காலம் கொடுத்த அனுபவத்திலிருந்து இன்று பின்னோக்கி பார்க்கும்போது எமக்கு ஒன்று தெளிவாகிறது. அன்றைய பெண்ணிய விடுதலை கருத்துக்கள் இரண்டு வித்தியாசமான எதிர்காலத்தை நோக்கிய பாதையை எமக்கு கொடுத்தது.

ஒரு பாதையில், பெண் விடுதலையுடன் மக்கள் பங்கொடுக்கும் சனநாயகமும் சமூக கூட்டொருமையும் கைகோர்த்து வரும். இரண்டாவது பாதை தாராளவாதத்தின் ஒரு புதிய வடிவத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனிநபர் சுதந்திரமும், திறமைக்கான முன்னேற்றமும் என்ற வாக்குறுதிகளை கொண்டுவரும். இவ்விதத்தில் அன்றைய பெண்ணியம் உறுதியான ஒரு எதிர்காலத்தை காட்டவில்லை.

இரண்டு விதமான வரலாற்று சமூகத்திற்கும் ஒத்துப்போன இப்பெண்ணியவாதம் இன்று ஒன்றிற்கு அடிமையாகி விட்டது. எமது கட்டுப்பாட்டிற்கு அப்பால் எம்மை மீறி இது நடக்கவில்லை. மாறாக நவதாராளவாதத்தின் கவர்ச்சியால் நாமே இதற்கு ஆதரவாக மூன்று கருத்துக்களை கொடுத்துள்ளோம்.எமது முதலாவது வாதம், கணவர் உழைக்க மனைவி வீட்டை பராமரப்பது என்பதை பற்றிய எமது விமர்சனமே.

அரச முதலாளித்துவத்தின் அடிப்படையே இதுதான். பெண்ணியவாதிகள் இதை விமர்சித்தது இன்று “நெகிழ்வான முதலாளித்துவத்தை” நியாயப்படுத்த உதவுகிறது. இந்த முதலாளித்தும் இன்று பெண்களின் ஊதிய உழைப்பில், முக்கியமாக குறைந்த ஊதியம் பெறும் பெண்களின் உழைப்பில், அதிகம் தங்கி வளர்ந்திருக்கிறது.
இவ்வேலையை இளம் பெண்கள் மட்டுமல்ல, திருமணமான பெண்களும், தாய்மார்களும் கூட செய்கிறார்கள். இது எல்லா இனப் பெண்களுக்கும் பொருந்தும். உலகெங்கும் பெண்கள் ஊதிய தொழில்களில் பெருந்தொகையாக வந்து சேர்ந்த போது, அரச முதலாளித்துவத்தின் கணவர் மட்டும் ஈட்டும் குடும்ப வருமானம் என்ற கருத்துக்கு பதிலாக இருவரும் வருமானம் ஈட்டுவது என்ற ஒரு புதிய கருத்து, அன்று பெண்ணியவாதிகளால் முன்னிறுத்தப்பட்ட கருத்து, வளர்ந்திருக்கிறது.

இப்புதிய கருத்தின் பின்னால், ஊதியம் குறைக்கப்பட்டதும், தொழிலின் உறுதியற்ற தன்மையும், வாழ்க்கைத்தரம் குறைந்ததும், தொழில் நேரம் அதிகரித்ததும், வறுமை, முக்கியமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் வறுமை, மோசமானதும் மறைந்து கிடக்கிறது. இதையே நவதாராளவாதிகள் பெண்கள் மேம்பாடு என்று முன்னிறுத்துகிறார்கள்.

 

குடும்ப ஊதியத்தை பற்றிய பெண்ணியவாதிகளின் விமர்சனத்தை காட்டி, முதலாளித்துவத்தின் இலாபத்தை பெருக்க பெண்கள் மேம்பாடு என்ற கனவை கையாழுகிறார்கள் நவதாராளவாதிகள். இதை நாம் உடைக்க வேண்டும். ஊதியத்திற்கான தொழிலை மையப்படுத்துவதை தவிர்த்து, மற்றவர்களை பராமரிக்கும் வேலை உட்பட, ஊதியமற்ற தொழிலை உயர்வானதாக்கும் கருத்துக்காக நாம் போராட வேண்டும்.

நவதாராளவாதம் கையிலெடுத்த எமது இரண்டாவது வாதம் இதுதான். வருமானத்தை மையப்படுத்திய ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து அதை நிவர்த்தி செய்ய முயன்ற அரச முதலாளித்துவத்தை பற்றி நாம் சரியாகவே அன்று விமர்சித்தோம். வருமானத்திற்கும் அப்பால் பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் துன்புறுத்தல்கள், குடும்ப வன்முறைகள் போன்றவற்றை அரச முதலாளித்துவம் கணக்கெடுக்கவில்லை என்று நாம் விமர்சித்தோம்.

வருமானத்தை மட்டுமே மையப்படுத்திய அரசியலை நிராகரித்து, பாலியலை மையப்படுத்திய படிநிலைகளுக்கும் சவால் விட்டு பெண்ணியவாதிகள் அரசியலை விரிவுபடுத்தினார்கள். நீதி என்பது வருமானம் பாலியல் கலாச்சாரம் என்ற இரண்டு தளத்திலும் இருக்க வேண்டும் என்று விரிவுபட்டிருப்பதற்கு பதிலாக, பாலியல் கலாச்சாரத்தில் மட்டுமே சமத்துவம் என்று மாற்றி விட்டது நவதாராளவாதம்.
நவதாராளவாதிகள் பொருளாதார சமத்துவத்தை பற்றிய வாதத்தை மறைப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக இது இப்போ உதவுகிறது. இதையும் இன்று பெண்ணியவாதிகள் மாற்றி பொருளாதார சமத்துவத்தை பாலியல் சமத்துவத்துடன் ஒருங்கிணைத்து முன்னிறுத்த வேண்டியுள்ளது.

இறுதியாக, பெண்ணியம் நவதாராளவாதத்திற்கு மூன்றாவது கருத்து ஒன்றையும் கொடுத்திருக்கிறது. அரச முதலாளித்துவம் தேவையானோருக்கு கொடுக்கும் உதவிகள் பெண்களுக்கும் சமத்துவமாக கொடுக்கவில்லை என்று பெண்ணியவாதிகள் அன்று சரியாகவே வாதிட்டார்கள். இன்று இதே வாதத்தை நவதாராளவாதம் “அரச உதவிகளுக்கு” எதிரான கருத்தாக கையிலெடுத்திருக்கிறது. இதுமட்டுமல்ல, அரசார்பற்ற அமைப்புக்களையும் தனதாக்கிவிட்டது நவதாராளவாதம்.

உலகின் வறுமையான பகுதிகளில் வாழும் பெண்களுக்கு அரசசார்பற்ற அமைப்புக்கள் கொடுக்கும் சிறிய கடனுதவி திட்டம், பெண்கள் நலனை மேம்படுத்தும் என்றும், அரச உதவித்தொகையைவிட இது சிறப்பானது என்றும், இது அரச உதவித்தொகை கொடுப்பதில் காணப்படும் பெண்கள் அடிமைப்படுத்தலுக்கு எதிரான பெண்ணியவாத திட்டம் என்றும் போற்றப்படுகிறது. இதன் பின்னால் உள்ள ஒரு உண்மை மறைக்கப்படுகிறது.

சிறுகடனுதவிகள் பெருமளவு வளரந்த அதே காலத்தில், வறுமையை நீக்க அரசுகள் முன்னெடுத்த பெரிய திட்டங்கள் கைவிடப்பட்டு விட்டன. சிறுகடனுதவிகள் இத்தகைய திட்டங்களுக்கு மாற்றாக இருக்க முடியாது. இங்கும் பெண்ணியவாதத்தின் கருத்து நவதாராளவாதிகளின் கையில் சிக்கிவிட்டது. அரசு மக்களை சமத்துவமாக நடத்துவதற்காக முன்வைக்கப்பட்ட விமர்சனம் அரசையே விலத்தி வர்த்தகத்தை முன்னிறுத்துவதற்கு கையாளப்படுகிறது.

Nancy Fraser
https://www.theguardian.com/commentisfree/2013/oct/14/feminism-capitalist-handmaiden-neoliberal

Exit mobile version