பூமியை நாம் மென்மேலும் சூடுபடுத்துவது கொரோனாவைவிடக் கொடும் பேரிடராக அமையும்!

உலகம் காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளுக்கு முகம்கொடுக்கத் தொடங்கியுள்ளது.

நீண்டு செல்லும் கோடை, வருடாந்த மழை வீழ்ச்சியைச் சில நாட்களிலேயே கொட்டித்தீர்க்கும் அளவுக்குக் குறுகிவரும் மாரி, அதிவேகத்துடன் அதிகநேரம் நின்று தாக்குகின்ற புயல்கள், புயல் மழையால் நீர்ப் பிரளயம் போல ஏற்படும் வெள்ளைப் பெருக்குகள் என்று இயற்கை தன் சீற்றங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இவற்றுக்கெல்லாம், பெற்றோலிய எரிபொருட்களை எரித்துத் தள்ளுவதால் வளியில் குவிந்து கொண்டிருக்கும் கரிக்காபனால் பூமி சூடாகி வருவதுதான் அடிப்படைக் காரணமாகும். இதனைக் கருத்திற்கொள்ளாது பூமியை நாம் மேன்மேலும் சூடுபடுத்துவது கொரோனாவைவிடக் கொடும் பேரிடராக அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில், சுனாமி நினைவு நாளான  நேற்று முன்தினம் (26.12.2020) இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

  image2 4 பூமியை நாம் மென்மேலும் சூடுபடுத்துவது கொரோனாவைவிடக் கொடும் பேரிடராக அமையும்!

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “கடல்நீர் சூடாகுவதால் கடற்காற்றில் சேரும் நீராவியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, புயலின் அழிப்புச்சக்தியும் அதிகரித்து வருகிறது. கடல் சூடாகிக் கடல் நீர் விரிவடைவதாலும், பனி மலைகள் உருகி வழிவதாலும் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இவற்றால் கரையோரப் பிரதேசங்கள் அடிக்கடி புயல்களுக்கு முகம் கொடுப்பதோடு கடல் நீரினுள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பனிப்படுக்கைகளின் கீழே மனிதர்கள் பூமியில் தோன்றுவதற்கு முன்னர் காணப்பட்ட வைரசுக்கள் இப்போதும் உறை நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பனி உருகுவதால் இவ்வைரசுக்கள் வெளிப்பட்டு மனிதர்களைத் தாக்குகின்ற அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இவ்வைரசுக்கள் மனிதர்களுக்குப் புதியன என்பதால், இவற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்காத காரணத்தால் பெரும் கொள்ளை நோய்களுக்கு மனிதர்கள் ஆட்பட நேரிடும். கொரோனா நோயை இல்லாதொழிப்பதற்கு உலகின் முழு நாடுகளும் ஒன்றுபட்டுப் போராடி வருகின்றன. ஆனால், நாம் வெளியேற்றி வருகின்ற கரிக்காற்றைக் கட்டுப்படுத்தக் கோருகின்ற ஐக்கியநாடுகள் சபையின் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் உலகநாடுகள் ஒன்றுபடத் தயாராக இல்லை.

image0 10 பூமியை நாம் மென்மேலும் சூடுபடுத்துவது கொரோனாவைவிடக் கொடும் பேரிடராக அமையும்!

தங்களது அபிவிருத்தி பாதிக்கப்படும் என்று கூறி பெற்றோலிய எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்குப் பல நாடுகள் பின்னடித்து வருகின்றன.
கொரோனோ நோய்க்கான தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்ததும் கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். ஆனால், காலநிலைப் பிறழ்வினால் ஏற்பட்டுவரும் இயற்கையின் கொடும் சீற்றங்களை எவராலும், எவற்றாலும் கட்டுப்படுத்த முடியாது.

இவற்றை நிறுத்துவதற்குக் காற்றைக் கரிப்பிடிக்க வைத்துப் பூமியைச் சூடுபோடுகின்ற எமது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுதான் ஒரே வழி என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் ச. சர்வராஜா அவர்களின் சிறப்புரையும், கடற்கோள், கொரோனா போன்ற பேரிடர்களினால் மரணித்தவர்களுக்கு நினைவு அஞ்சலியும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.