Tamil News
Home செய்திகள் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடலை தொடர்ந்து பேணுவோம் – அமெரிக்கா

புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடலை தொடர்ந்து பேணுவோம் – அமெரிக்கா

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடலை கொண்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தடை விதித்திருக்கும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு இராஜதந்திர வட்டாரங்களில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அரசுக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தெற்காசியப் பிராந்தியத்துடனான எமது தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு புலம்பெயர் சமூகத்தினர் பெறுமதி மிக்க பங்காளிகளாக உள்ளனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உள்பட தெற்காசிய புலம்பெயர் சமூகத்தினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பாடலைக் கொண்டிருப்போம்” எனத் தெரிவித்திருக்கின்றது.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ்க் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல புலம்பெயர்ந்த அமைப்புக்கள் கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் தடைசெய்யப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதனைவிட, பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, மலேஷியா உட்பட பல நாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டனர்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தவுடன் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் ஜெனைிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாகக் கருதப்படும் நிலையில்தான் அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியிலேயே புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. பரஸ்பரம் நலன்தரும் விடயங்களிலான பேச்சுக்கள் தொடரும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

Exit mobile version