Home ஆய்வுகள் புறந்தள்ளப்படும் இளைஞர்கள் – துரைசாமி நடராஜா

புறந்தள்ளப்படும் இளைஞர்கள் – துரைசாமி நடராஜா

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் இளைஞர்களின் வகிபாகம் அதிகமாகும்.இதனை கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கி அவர்களை வளர்த்தெடுப்பது மிகவும் இன்றியமையாததாகும்.இந்நிலையில் மலையக இளைஞர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் உரியவாறு இணைத்துக் கொள்ளப்படவில்லை என்றும் அவர்களின் கனவுகள் மழுங்கடிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட ஒரு நிலையிலேயே அவர்கள் இன்னமும் இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.இதன் நம்பகத்தன்மையும் பலராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் மலையக இளைஞர்களுக்கான வாய்ப்புக்கள் விரிவுபடுத்தப்பட்டு சமூகத்திற்கும் நாட்டிற்கும் தோள்கொடுக்கக் கூடியவர்களாக அவர்கள் உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இளைஞர் சமூகம் ஒரு நாட்டின் மிகப்பெரும் சக்தியாகும். உழைக்கும் படை என்ற வகையில் இவர்கள் ஆதிக்கம் கையோங்கும் பட்சத்தில் நாடு பல்வேறு வழிகளிலும் முன்செல்லும் நிலைமை ஏற்படும்.உலக வரலாறுகளை இளைஞர்கள் மாற்றியமைத்திருக்கின்றார்கள்.உலகத் தலைவர்கள் பலர் அரசியலில் கோலோச்சுவதற்கு இளைஞர்கள் உந்துசக்தியாக இருந்திருக்கின்றார்கள்.இந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியிலும் இளைஞர்களின் பங்களிப்பு கணிசமாக இருந்ததாக செய்திகள் வலியுறுத்துகின்றன.

Upcournty புறந்தள்ளப்படும் இளைஞர்கள் - துரைசாமி நடராஜாஇளைஞர்கள் சமூகத்தின் அச்சாணிகள் என்ற வகையில் அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதைவிடுத்து இளைஞர்களை புறந்தள்ளிச் செயற்பட எவரும் நினைப்பார்களேயானால் அதனால் ஏற்படும் பாதக விளைவுகள் அதிகமாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இளைஞர் சக்தியை புறக்கணித்ததன் விளைவாக உலகநாடுகள் எதிர்கொண்ட சவால்கள் அதிகமாகும்.இலங்கையும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை என்பதும் தெரிந்ததேயாகும்.

கடந்த காலத்தில் இலங்கையின் காலிமுகத்திடலை மையப்படுத்தி இடம்பெற்ற இளைஞர் போராட்டம் நாட்டின் தலைமையையே ஆட்டம் காண வைத்ததும் நீங்கள் அறிந்ததேயாகும்.தீர்மானம் மேற்கொள்ளும் பல இடங்களில் இளைஞர்கள் உரியவாறு உள்ளீர்க்கப்படவில்லை.

இத்தகைய இடங்களில் இளைஞர் தொடர்பான தீர்மானங்களை முதியவர்களே மேற்கொள்வதாகவும் இதனால் பாதக விளைவுகள் பலவும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய நிகழ்வுகளினால் இளைஞர் அதிருப்தி நிலை மேலும் அதிகரித்து காணப்படுவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நான்காண்டு திட்டம்

இளைஞர் அபிவிருத்தி கருதி கடந்தகாலங்களில் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளிலும் கவர்ச்சியான வாக்குறுதிகள் பலவும் முன்வைக்கப்பட்டன.இதனிடையே தேசிய மக்கள் சக்தி கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இளைஞர் மற்றும் சமூக முன்னேற்றம் கருதி காத்திரமான விடயங்கள் சிலவற்றை முன்வைத்திருந்தது.

இளைஞர்களின் சர்வதேச மொழி மற்றும் தகவல் தொழிநுட்பத்தை மேம்படுத்த இரவுப் பள்ளிகள் நிறுவப்படும்.கல்விச் செயல்முறையை பூரணப்படுத்தாத இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதற்கு நான்காண்டு திட்டம் தயாரிக்கப்படும்.சுயதொழில் திட்டங்களில் இளம் தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்குவதற்கு ஒரு தனி இளைஞர் வங்கி உருவாக்கப்படும்.கல்வியை மேம்படுத்த ஐந்தாண்டு டிஜிட்டல் கல்வித் திட்டங்கள் முன்வைக்கப்படும்.

அனைத்து துறைகளிலும் இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக திட்டமொன்று வகுக்கப்படும் என்று பல்வேறு விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தன.இவ்வாறு பல திட்டங்கள் இளைஞர் அபிவிருத்தி கருதி முன்வைக்கப்பட்டபோதும் தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல காரணங்களால் இளைஞர்களை அந்த நன்மைகள் சென்றடையவில்லை என்பதும் குறிக்கத்தக்கதாகும்.

நாட்டின் இளைஞர்கள் தொடர்பாக நாம் பேசுகின்ற போது மலையக இளைஞர்கள் தொடர்பாக நாம் அதிகமாகவே பேசவேண்டிய தேவையுள்ளது.இவர்களின் அபிவிருத்தி தொடர்பில் வாக்குறுதிகள் பலவும் அவ்வப்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் அவை பெரும்பாலும் ஏட்டளவிலேயே முற்றுப்பெற்று விடுகின்றமை வருந்தத்தக்கதாகும்.இளைஞர் தொழில் வாய்ப்புகளும் காத்திரமானதாக இல்லை.இதேவேளை 1977 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகளினால் தொழில் வாய்ப்புகள் பலவும் நகர்ப்புறங்களில் ஏற்படுத்தப்படுவதற்கு அது காரணமாகியது.

இத்தகைய தொழில் வாய்ப்புகளினால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் தொழில் திறன் விருத்தி இல்லாத மற்றும் குறைந்த கல்வித் தகைமைகளைக் கொண்டிருந்த நிலையில் கீழ்மட்டத் தொழில்களையே மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானது.இதன் காரணமாக தொழில் திறனற்ற இளைஞர்களின் தொழிற்றிறன் மேம்பாடு கருதி தொழிற்பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை மலையகத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் வலுப்பெற்று வருகின்றன.பெரும்பாலான மாணவர்கள் குறைந்த தகைமையுடன் க.பொ.த.சாதாரண தர மற்றும் உயர்தரத்தின் பின்னர் பாடசாலையை விட்டு வெளியேறுகின்றனர்.

இன்னும் சிலர் இடைநிலை வகுப்புகளில் இடைவிலகுகின்றனர். இவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சிகளை வழங்க வேண்டிய தேவை காணப்படுவதால் தொழிற்பயிற்சி நிலையங்கள் மலையகத்தில் அதிகரிக்கப்படுதல் வேண்டும்.இதனிடையே சமகாலத்தில் இளைஞர்கள் கல்வி மேம்பாட்டின் ஊடாக அரசதுறை தொழில் வாய்ப்புக்கள் சிலவற்றை பெற்றுக் கொண்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

இதேவேளை முன்னைய காலங்களில் பெருந்தோட்டத் துறையில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு தோட்டப்புற இளைஞர்கள் அதிகமாக உள்ளீர்க்கப்பட்டனர்.எனினும் தற்போது அந்த நிலைமாறி பெரும்பான்மையினரின் ஊடுருவல் தோட்டப்புற தொழில் நிலைகளில் அதிகரித்து வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.இதனால் இளைஞர்களின் அதிருப்தி இரட்டிப்பாகியுள்ளது.

பெருந்தோட்டத் தேயிலைத் தொழிற்றுறை இன்று சவால்கள் பலவற்றுக்கும் முகம் கொடுத்து வருகின்றது.இத்தொழிற்றுறையின் அதிகரித்த நெருக்கீடுகள், ஊதியப் பற்றாக்குறை மற்றும் நவீன தொழில்நுட்ப கையாளுகை இல்லாமை எனப்பலவும் இளைஞர்கள் இத்தொழிற்றுறையில் நாட்டம் கொள்வதற்கு தடையாக உள்ளன.இதன் காரணமாகவும் மலையக இளைஞர்கள் மாற்றுத் தொழிற்றுறையை நாடிச் செல்கின்றனர்.கல்வி ஈடுபாடு மற்றும் வளர்ச்சி நிலை என்பனவும் மாற்றுத்தொழில்களை இளைஞர்கள் நாடிச்செல்வதற்கு பிறிதொரு காரணமாகும்.

மலையக அரசியல்வாதிகள் மலையக இளைஞர்களின் நலன் கருதி காத்திரமான வேலைத்திட்டங்கள் பலவற்றையும் முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.என்றபோதும் அவர்களின் செயலாற்றுகை தொடர்பில் திருப்திகொள்ள முடியாத ஒரு நிலையே இருந்து வருவதாகவும் கருத்துக்கள் ஓங்கி ஒலிக்கின்றன.இதனை கருத்தில் கொண்டு மலையக அரசியல்வாதிகளும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு இளைஞர் அபிவிருத்திக்கு வலுசேர்க்க வேண்டியது மிகவும் அவசியமும் அவசரமுமாகும்.

மனிதவள அபிவிருத்தி தேவை

இதேவேளை தோட்டப்புற இளைஞர்களின் மனிதவள அபிவிருத்தி தேவைகளை பூர்த்தி செய்யவேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் மு.சின்னத்தம்பி தனது கட்டுரையொன்றில் வலியுறுத்தியுள்ளார்.மேலும் தோட்ட இளைஞர்களின் மனிதவளத் தேவைகளை இனம் காணும்போது இளைஞர்களின் அபிலாஷைகளுக்கு மட்டுமல்லாது தோட்டங்களின் தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் பேராசிரியர் இவ்வாறான மனிதவள அபிவிருத்தி தேவைகளுள் சிலவற்றையும் சுட்டிக்காட்டுகின்றார்.தோட்டத்துறைக்கு வெளியே வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான வினைத்திறன்களை அவர்களிடையே அபிவிருத்தி செய்தல்.தோட்டங்களுக்கு வெளியே சுயதொழில்களில் ஈடுபடுவதற்கும் வருமானம் உழைப்பதற்குமான அவர்களின் முயற்சியாண்மையை அபிவிருத்தி செய்தல்.

தோட்டங்களுக்கு உள்ளேயே மேலதிக வருமானத்தை உழைத்துக் கொள்வதற்குத் தேவையான வினைத்திறனை உருவாக்குதல்.தோட்ட விவசாயத்திற்கும் வேறு உற்பத்தித்துறை நடவடிக்கைகளுக்கும் தேவையான வினைத்திறன்களை மேம்படுத்துதல்.தோட்டங்களோடு தொடர்புடைய ஆதாரத் தொழில் சார்ந்த வினைத் திறன்களை மேம்படுத்தல்.தோட்ட இளைஞர்களின் மனப்பாங்குகளை மாற்றுவதன் மூலமும் பெண்களின் பங்கெடுப்பு, பால் தொடர்பான பிரச்சினைகள், மேலதிக வருமானத்தை உழைத்தல் என்பன பற்றிய அவர்களது அறிவினை வளர்ப்பதன் மூலமும் தோட்டக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் போன்ற பல விடயங்களையும் பேராசிரியர் சின்னத்தம்பி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மனிதவள அபிவிருத்தி தேவைகளை பூர்த்தி செய்யும் விதமான புதிய பயிற்சி நெறிகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.அத்தோடு பயிற்சி நெறிகளை தரமுயர்த்துதல், இளைஞர்களின் தொழில்சார் பயிற்சி, தொழிநுட்ப வினைத்திறன் , பொது அறிவு என்பன உயர்த்தப்பட வேண்டும்.இதற்கென அறிவுசார் பயிற்சி திட்டங்கள், மைய வினைத்திறன் அபிவிருத்தி பயிற்சித் திட்டங்கள், தொழில்சார் பயிற்சித் திட்டங்கள், முயற்சியாண்மையை அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சித் திட்டங்கள்,தோட்ட வேலைகளுக்கு பயன்படக்கூடிய பயிற்சித் திட்டங்கள் போன்றவற்றை உரியவாறு அமுல்படுத்துவதன் ஊடாக பெருந்தோட்ட இளைஞர்களிடையே மனிதவள அபிவிருத்தி ஏற்படுவதோடு தேசிய நீரோட்டத்தில் சங்கமிப்பதற்கும் அது உந்துசக்தியாக அமையும் என்றும் வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கங்கள் என்பன சமூகநலன்கருதி பல தொண்டுகளைப் புரிந்தாலும் இளைஞர்கள் முழுமையாக தமது சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு முழுமூச்சுடன் சீரிய முறையிலே சிந்தித்து ,தம்மை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவே சமூகத்தின் அபிவிருத்திக்கு வலுசேர்க்க முடியும்.தன்னை வளர்த்துக் கொண்ட பின்னரே மற்றோருக்கு தொண்டு புரியவும் வழிகாட்டவும் ஒருவன் தகுதியுடையவனாகின்றான் என்ற புத்திஜீவிகளின் கருத்தும் ஆழ்ந்து நோக்கத்தக்கதாகும்.இதனை இளைஞர்கள் புரிந்து செயற்பட வேண்டும்.

 

Exit mobile version