புர்காவிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாது – கெஹலிய ரம்புக்வெல

இலங்கையில் புர்காவிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாதுஎன அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்கு இனி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவேண்டும். விரைவில் இந்த ஆணை அமலுக்கு வரும் என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று  இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்,  புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வது குறித்து தற்போது பரசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், புர்கா மற்றும் நிகாப்பிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாதென்றும் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்துக்குப் பின்னரே புர்கா மற்றும் நிகாப்பிற்கு  அரசாங்கம் தடை விதிக்கும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புர்கா மற்றும் பதிவுசெய்யப்படாத மதரஸா பாடசாலைகளை தடை செய்தல் தொடர்பான பிரேரணையொன்றில் கடந்த 13ஆம் திகதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கையெழுத்திட்டார்.

அதன் பின்னர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் புர்காவை தடை செய்வது தொடர்பான பிரேரணை நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.