Tamil News
Home செய்திகள் புதிய ஆவணம் ஒன்று ஐ.நா.வுக்கு அனுப்பிவைக்கப்படும் – யாழ்ப்பாணத்தில் சுரேஷ் தகவல்

புதிய ஆவணம் ஒன்று ஐ.நா.வுக்கு அனுப்பிவைக்கப்படும் – யாழ்ப்பாணத்தில் சுரேஷ் தகவல்

மியன்மாரில் இடம்பெற்றமை போன்று இலங்கையிலும் இனப்படுகொலை இடம்பெற்றதாகத் தகவல்கள் திரட்டப்பட்ட ஆவணமொன்றை ஐ.நாவுக்கு அனுப்புவதற்காக அனைத்துத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை நோக்கி மூன்று கோரிக்கைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை நோக்கி ஒரு கோரிக்கை என்று நான்கு கோரிக்கைகளை மையப்படுத்திய ஆவணமொன்றை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இறுதி செய்துள்ளது.

இதில் நான் உட்பட கூட்டணியின், பங்காளிக்கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம். கே.சிவாஜிலிங்கம், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் பொதுச்செயலாளர் அனந்தி சசிதரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளோம்.

இந்நிலையில் இந்தக் கோரிக்கை ஆவணம், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், சில புலம்பெயர் அமைப்புக்கள் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்தத் தரப்பினர் இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு கையொப்பமிடும் இடத்து விரைவில் ஐ.நா.செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸ், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது” என்றார்.

Exit mobile version