புதிய அனைத்துலக ஒழுங்கில் இந்துமா கடலின்  முக்கியத்துவமும்ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாப்பும்

1945ஆம் ஆண்டில் 2ஆவது உலகப் பெரும் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, அனைத்து உலக நாடுகளின் மன்றம் நிறுவப்பட்டது முதல் ஐக்கிய அமெரிக்கா அனைத்துலக பொருளாதார நிறுவனங்களையும், இருதரப்பு பிராந்திய பாதுகாப்புக்கான அமைப்பாண்மைகளையும், தாராண்மைவாத அரசியல் விதிமுறைகளையும் கட்டி எழுப்பிப் பேணுதல் மூலம் தனது அனைத்துலகு குறித்த அக்கறைகளை வளர்த்து வந்தது. இந்த கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் கூட்டாக ‘அனைத்துலக ஒழுங்குமுறை’  என அழைக்கப்பட்டது.

அண்மைக் காலங்களில் வளரச்சியுற்றுள்ள உலக அதிகார மையங்கள் இந்த ‘அனைத்துலக ஒழுங்கு முறை’க்கு சவால்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஆசியாவைப் பொறுத்த மட்டில் பனிப்போர் மூலம் சோவியத் இரஸ்சிய ஒன்றியத்தின் பாதுகாப்பு அமைப்பாண்மைகளை வலுவிழக்கச் செய்த அமெரிக்காவுக்குச் சீனமக்கள் குடியரசின் உலகப்  பொருளாதார மேலாண்மை புதிய சவால்களை; அனைத்துலக பொருளாதார முறைமைகளிலும், அனைத்துலகப் பாதுகாப்புக்கான அமைப்பாண்மைகளிலும் ஏற்படுத்தி வருகிறது.

அதேவேளை, இந்தியத் துணைக் கண்டத்தில் இந்திய நடுவண் அரசின் அதிகார எழுச்சி  என்பது, ஒரு பெரும் நிலப்பரப்பின்  பிராந்திய மேலாண்மை என்ற தளத்திலிருந்து  தெற்காசிய நிலப்பரப்பின் வலுவாக மாறி, அதனையும் தாண்டி உலகச் சந்தையிலும், உலக அரசியலிலும் ஆசியா சார்ந்த மற்றொரு தீர்மானிக்கும் சத்தியாக-எழுச்சியாக உருவாகிய நிலைமையில் இந்தியா உலகநாடுகளின் மன்றத்தின் தீர்மானம் எடுக்கும் உரிமையிலும்; அதாவது அனைத்துலக நாடுகளின் மன்றத்தின்  பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடாகவும் தன்னை உறுதிப்படுத்த முனைகிறது.

இந்நிலையில், இன்று உலக சமூகங்களையும், பொருளாதாரத்தையும், அரசியலையும், ஆன்மிகத்தையும் முற்றுமுழுதாக பத்து மாதத்தில் பந்தாடி முழு உலகையுமே நிச்சயமற்ற சமூக, பொருளாதார, ஆன்மீக அரசியல்  உலகாக கோவிட் – 19 மாற்றி நிற்கிறது.

இந்த ‘அசாதாரணத்தின் சாதாரணம்’  என்ற இக்கட்டான உலக வாழ்வியல் நிலைக்குள் உலக நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மீகக் கட்டமைப்புக்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய அவசரகாலநிலை காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

இந்த மறுசீரமைப்பில் சீனா ஏற்கனவே திட்டமிட்ட முறையில் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் ஏற்படுத்தி வைத்துள்ள கடன் பொறிக்குள் உள்ள நாடுகள் சீனாவிடமே முழுதும் தங்கி நின்று நிதி உதவி பெற வேண்டிய இயல்புநிலை தோன்றியுள்ளதால், உலகின் புதிய வல்லாண்மையாக சீனா பேரெழுச்சி கொள்ளும் என்பது பலத்த எதிர்வு கூறலாக உள்ளது.

தனக்கு ஆசிய ஆபிரிக்க நாடுகள் வழியாக உலகச் சந்தை இணைப்பைத் தந்த தனது முன்னைய பட்டு வர்த்தகப் பாதையினை மீளவும் கடலிலும், தரையிலும் மீண்டும் தொடங்கும் சீனாவின் திட்டத்தால்  150 நாடுகளுக்குச் சீனா நிதிக்கடன் உதவிகளை பல்வேறு வழிகளில் செய்து; இன்று அவற்றின்  தேசிய வருமானங்களில் குறிக்கப்பட்ட வீதம் சீனாவுக்கு வட்டியாகவும், இறக்குமதிப் பொருட்களுக்கும் சேவைகளுக்குமான விலைகளாகவும் செலுத்தப்படும் புதிய நிலையை உருவாக்கியுள்ளதால், சீனா மேலும் மேலும் நிதிப்பலம் பெறும் என்பது வெளிப்படையான உண்மை.

இது இதுவரை உலக வல்லாண்மைகளாக, பிராந்திய மேலாண்மைகளாக இருந்து வந்த நாடுகளுக்குப் புதிய அரசியல் சவாலாக மாறியுள்ளது. இதனால் இன்று மீளவும் புதிய அனைத்துலக ஒழுங்குமுறை ஒன்றை அமெரிக்கா உருவாக்க வேகமாக முனைவதும் இயல்பாகிறது.

இந்த முயற்சியில் இந்துமா கடலின் முக்கிய தளமாக உள்ள இலங்கைக் கடற்பரப்பில் அகலக் கால் வைத்துள்ள சீனா, அதனை மேலும் வலுப்படுத்த இவ்வருட மார்ச் மாதத்தில்  500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியையும், அக்டோபர் மாதத்தில் கோவிட் கால உதவி நிதியமாக 90 மில்லியன் டொலர் உதவியையும் வழங்கி சிறீலங்கா அதனது இறையாண்மை ஒப்பந்தங்களாகப் பெற்ற படுகடன்களுக்கு வட்டிகூட கட்ட இயலாது வங்குரோத்தாகும் அபாயத்தில் இருந்து காப்பாற்றி; அதன் பின்னணியில் சிறீலங்காவை தனது கடன்பொறிக்குள் மேலும் அகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2010இல் சீனாவுக்கான படுகடன் வட்டியைக் கட்ட இயலாத நிலையில் மகிந்த ராஜபக்ச அரசு தவித்த போது, அம்பாந்தோட்டையில் கடலோர 15000 ஏக்கரை தனதாக்கி; அங்கு தனது எக்ஸ்ஈம் வங்கி (EXIM Bank) மூலம்  துறைமுகத்தின் முதலாம் பகுதியை அமைப்பதற்கு 361 மில்லியன் டொலரை முதலிட்டு கட்டியெழுப்பி,  அத்துறைமுகம் செயற்படத் தொடங்கியது முதல் அதில் தன்னாட்சியாக 85 வீதத்தைக் கொண்டு திகழ்கிறது.

இது தேவை ஏற்படும் காலங்களில் சீனா தனது போர்க்கப்பல்களை நிறுத்துவதை சிறீலங்காவின் இறைமையால் தடுக்க முடியாத நிலையினை ஏற்படுத்தி உள்ளதால், சிறீலங்காவை இறைமையும், தன்னாதிக்கமும் உள்ள தனிநாடாக; அனைத்துலக நாடுகளின் மன்றத்தில் உறுப்புரிமை உள்ளதாகக் கருத முடியுமா என்ற கேள்வியை 1956இற்குப் பின்னர் மீளவும் எழுப்பி உள்ளது.

1948 முதல் 1956 வரை பிரித்தானியக் கடற்படை திருகோணமலையில் கப்பல் நிறுத்தும் உரிமை கொண்டுள்ளது என இரஸ்சியா இலங்கைக்கான அனைத்துலக உறுப்புரிமையை தனது வீட்டோ அதிகாரம் கொண்டு இருமுறை தடுத்து நிறுத்தியது. மேலும் கொழும்பு நகர முதலீடுகளில் ஈடுபடும் சீனர் தலைநகரிலும் தனக்கான தன்னாட்சி வலயங்களை உருவாக்கி, இலங்கை அரசியலில் தான் தீர்மானம் எடுக்கும் சக்தியாக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இவை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இந்துமா கடல் மேலான அவற்றின் மேலாண்மைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருவதை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலையில், தங்களது சந்தையினையும், இந்துமா கடல் மேலான மேலாண்மையையும் எவ்விதமாவது தக்கவைக்க வேண்டும் என்னும் நோக்கில் 55 பில்லியன் இறையாண்மை ஒப்பந்தங்களுடன் கூடிய படுகடன்களுக்கு ஆண்டொன்றுக்கு 2.9வீத தேசிய வருமானத்தை வட்டியாக வாரிவழங்கி மகிழ்ந்து கொண்டிருக்கும் ராஜபக்ச அரசினை நிதி மீட்பு செய்தாவது தங்கள் உறவையும், சிறீலங்காவுடன் வளர்ப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் பலவகைகளில் நிதி உதவிகளையும், கடன்களையும் தொடர்கின்றன. சீனாவின் கடனிலும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கான நிதிக் கடன்களிலும், இந்தியாவின் கலாச்சாரப் பேணுகைக் கடன்களிலும் கோவிட் – 19இற்குப் பின்னரான காலத்தைச் சிறீலங்கா தொடங்கியுள்ளது.

1948 முதல் இன்று வரை இலங்கைக்கு 2 பில்லியன் டொலர்களை நிதியளிப்புச் செய்துள்ள அமெரிக்கா, இன்று மில்லேனியம் சலஞ்ச் கோப்பரேசன் (மில்லேனிய சவால்களுக்கான கூட்டுறவு) நிதியம் என்னும் பெயரில் 480 மில்லியன் டொலர்களையும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கென 39 மில்லியன் டொலர்களையும்  கொடுத்து உதவுகிறது.

அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் அவர்கள் இந்தோ பசுபிக் கடல்வழிப் பாதுகாப்பு அனைத்து நாடுகளுக்கும் முக்கியமானது என வலியுறுத்தி, இலங்கையையும் அதில் இணைத்து சிறீலங்காக் கடற்படைக்கு வலுப் பயிற்சிகளை அளிக்கவும் இணங்கியுள்ளார். இந்தச் சூழலில் இந்தியா, யப்பான், அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் நாற்கூட்டு இணைப்பாக இந்துக் கடல் மேலான தனது மேலாண்மையை உறுதிப்படுத்த அமெரிக்கா எடுக்கும் இந்தோ பசுபிக் பாதுகாப்பு முயற்சிகளிலும், சிறீலங்கா கடற்படையினை இணைப்பதற்கான முயற்சிகளும் அமெரிக்காவால் தொடரும் என்பது உறுதியாகிறது.

இந்தியா 1987இல் இந்திய-இலங்கை உடன்படிக்கை வழியாக  ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு மிகக்குறைந்த தீர்வாக ஒற்றையாட்சியில் மட்டுப்படுத்தப்பட்ட  நில மற்றும் நிர்வாகப் பொலிஸ் அதிகாரங்களை உடைய வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபை என்ற தீர்வை சிறீலங்காவின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமாக அமைக்க வைத்து அந்தப் பின்னணியில் எந்தப் பாதுகாப்புப் பிரச்சினையை சிறீலங்கா சந்தித்தாலும், தன்னிடமே முதலில் உதவி கோர வேண்டும் என்ற கட்டுப்படுத்தல் மூலம் தனக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் இந்துமா கடல் மேலான மேலாண்மையையும் நெறிப்படுத்திக் கொண்டது.  ஆனால் இதுவரை நில மற்றும் பொலிஸ் அதிகாரப்பகிர்வு என்ற பேச்சுக்கே மதிப்பளிக்காமல் தனது நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வடக்கு-கிழக்கு மாகாண சபையையும் பிரித்துக் கொண்ட சிறீலங்கா இந்திய-இலங்கை உடன்படிக்கையை எவ்வித அச்சமுமின்றி மீறியது.

இந்தியா தனது நெறிப்படுத்தல்களை சிறீலங்கா ஏற்காத நிலையிலும், இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான இவ்வாண்டு மெய்நிகர் உச்சிமாநாட்டில் தனது பிரதமர் நரேந்திர மோடி மூலம் புதிய அரசியலமைப்பு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தச் செய்தது. ஆயினும் அந்த உச்சி மாநாட்டில் எதைப் பேசினேன் என்பதையே தான் மறந்து விட்டதாகச் சிறீலங்காப் பிரதமர் மகிந்த ராஜபக்சா அறிவித்துள்ளார். இது இந்தியாவை எதிர்க்கும், பகைக்கும் சிறீலங்காவின் உண்மைநிலையை மீளவும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய சூழலில், தங்களின் வரலாற்றுத் தாயகத்தில் தங்களின் தேசியத் தன்மையுடன் தங்களுக்கு இயல்பாகவே உள்ள இறைமையின் அடிப்படையிலான தன்னாட்சி உரிமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் மக்கள் எவ்வாறு அனைத்துலகப் பிரச்சினையாக உள்ள தங்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பதே இன்றுள்ள கேள்வி.

இந்துமா கடலை மையப்படுத்திய இன்றைய உலக வல்லாண்மை மற்றும் பிராந்திய மேலாண்மைப் பிரச்சினைகளில் ஈழத்தமிழர்கள் தம்முடைய இந்துமா கடல் மேலான ஆதிபத்திய இறையாண்மையையும் அதனை மதியாது ஈழத்தமிழர்களின் பிரதிநிதிதித்துவமின்றி நடாத்தப்படும் எந்த இந்துமா கடல் அமைதிக்கான அல்லது நடுநிலைக்கான முயற்சியும் பலனளிக்காது என்பதையும் உலக மக்களுக்கும், நாடுகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் பிரதிநிதித்துவம் இடம்பெறாவிட்டால், சிறீலங்கா இந்துமா கடலைப் பேரப் பொருளாக்குவதைத் தடுக்க இயலாது என்பதையும், உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இவ்விடத்தில் ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரமாக உள்ள இந்துமா கடலில் நடைமுறை தன்னாதிக்கம் செலுத்திய 1978 முதல் 2009 வரையான 31 ஆண்டு காலத்திலும் இந்துமா கடலில் வல்லாண்மைப் போட்டிகள் தவிர்க்கப்ட்டதையும், ஈழத்தமிழர்களின் இந்துக்கடல் மேலாண்மையின் பின்னடைவே இந்திய அமெரிக்கப் பிரச்சினைகளின் இன்றைய நிலைகளின் தொடக்கமாகவும்-தொடர்ச்சியாகவும் அமைகிறது என்பதையும் உலகுக்கு விளக்க வேண்டும். எந்த இறைமையும் மக்கள் சார்ந்ததே தவிர ,தேர்தல் வழி தெரிவான பிரதிநிதிகள் அதனைச் சரிவர நிறைவேற்றாத இடத்தில் அவ்விறைமை மக்களிடமே மீண்டு விடும் என்பதையும் உலக அரசியல் அறிவியல் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அந்த வகையில், உலக நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு அளிக்கக் கூடிய சிறப்புப் பிரதிநிதித்துவம் வழியாகவே இன்றைய புதிய அனைத்துலக ஒழுங்குமுறை சிறப்படையும் என்பதை ஒற்றுமையாக ஓரணியில் தாயகத்திலும், உலகெங்கும் ஈழத்தவர் தங்கள் பலமே தமக்கான ஒரே பேரம் பேசும் ஆற்றலாக உள்ளது என்ற உணர்வுடன் எடுத்துரைக்க; வல்ல கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும். இதுவே ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான புதிய பலத்தை ஈழத்தமிழர்களுக்கு உருவாக்கும்.

– சூ.யோ. பற்றிமாகரன் –