பிரேசிலில் மோசமாகும் கொரோனா – வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி விலகல்

சீனாவுடனும் அமெரிக்காவுடனும் உறவுகளை பாழ்படுத்துவதன் மூலம் பிரேசில் மக்களின் உயிர்களை அபாயத்தில் தள்ளியதாக வெளியுறவுத்துறை அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விமர்சித்ததைத் தொடர்ந்து பிரேசில் நாட்டின் அதிதீவிர வலதுசாரி வெளியுறவுத் துறை அமைச்சர் எர்னஸ்டோ அரவ்ஜோ  பதவி விலகியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.82 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில்  கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், 3.12 இலட்சம் பிரேசில் மக்களை பலி வாங்கிய கொரோனா நோய்த்தொற்று இந்த மாதம் மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 27 மாதங்களாக வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் உள்ள எர்னஸ்டோ  அரவ்ஜோ மீதான எதிர்ப்பு இறுதியில் வெடித்து விட்டது என்று கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

சீனா, இந்தியா, அமெரிக்கா, போன்ற நாடுகளுடனான உறவை அவர் தவறாக கையாண்டதன் காரணமாக பிரேசிலுக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை மோதுமான அளவில் பெற முடியவில்லை என்று பலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சனிக்கிழமை அன்று, கொரோனா நோய்தொற்றினால் பிரேசிலின் தினசரி இறப்பு எண்ணிக்கை 3,000ஐத் தாண்டியது. கடந்த வியாழக்கிழமை புதிய கொரோனா நோய்த் தொற்றுகள் ஒரே நாளில் ஒரு இலட்சத்தைத் தாண்டியதாக பிரேசிலின் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.