பிரித்தானியா கொன்சவேட்டிக் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழ் மக்களை தவறாக வழிநடத்தலாம்

இரு தேசம் என்ற கொள்கை இஸ்ரேல் – பலஸ்தீனத்திற்கே உரித்தானது அது சிறீலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கானது அல்ல என பிரித்தானியாவின் கொன்சவேட்டிவ் கட்சி தெளிவுபடுத்தியுள்ளதாக பிரித்தானியா தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் 53 ஆவது பக்கத்தில் சைப்பிரஸ், சிறீலங்கா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் உறுதியையும் அமைதியையும் ஏற்படுத்த தொடர்ந்து ஆதரவுகளை வழங்குவோம் என்பதுடன் இரு தேசங்கள் என்ற தீர்வுக்கும் ஆதரவுகளை வழங்குவோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இது தொடர்பில் நாம் கொன்சவேட்டிவ் கட்சியிடம் மேலதிக விளக்கங்களைக் கோரியபோது இரு தேசங்கள் என்ற சொல் மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது, சிறீலங்காவுக்கோ அல்லது சைப்பிரசுக்கோ அல்ல என கட்சியின் பிரதித் தலைவர் போல் ஸ்கோலி தொவித்துள்ளார்.

எனவே தமிழ்மக்கள் இந்த அறிக்கையை தவறாக எண்ணி ஏமாற்றம் கொள்ளவேண்டாம், கொன்சவேட்டிவ் கட்சிக்கு ஆதரவாக செயற்படும் தமிழர்கள் இந்த தவறான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அது தவறானது எனவே தமிழ் மக்கள் பிரித்தானியா அரசியலில் நடுநிலமையாக இருப்பதே சிறந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான ஆங்கில அறிக்கையை பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்தவும்.

பிரித்தானியா தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை.