பிரித்தானியாவின் வர்த்தக சட்ட மசோதாவில் வரவுள்ள திருத்தங்களுக்கு ICPPG ஆதரவு

இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் நாடுகளுடன் பிரித்தானியா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதனை நிறுத்தும் வர்த்தக மசோதாவின் திருத்தங்களை ஆதரிக்கக் கோரி ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை உட்பட இனப்படுகொலை செய்யும் நாடுகளுடன் பிரித்தானியா அரசாங்கம் வர்த்தக ஒப்பந்தங்களை செய்வதை தடுக்கும் வர்த்தக மசோதாவின் திருத்தங்களுக்கு அனைத்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பிரபுக்கள் சபை உறுப்பினர்களையும் (House of Lords) ஆதரவளிக்க வேண்டுகோள் விடுத்து சர்வதேச இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் கண்டிப்பதற்கான சர்வதேச மையத்தினால் (ICPPG) இன்று ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் House of Commons இடம்பெற்ற நீண்ட விவாதங்களிற்கு பின்னர் அவை தற்போது House of Lords இற்கு நகர்ந்துள்ளதாகவும் தொழிற்கட்சி வேறு சில எதிர்க்கட்சிகளின் உதவியுடன், இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களைச் செய்யும் நாடுகளுடனான வர்த்தக தொடர்புகளை உயர் நீதிமன்றம் தடை செய்வதனை பிரித்தானிய அரசாங்கம் அனுமதியளிக்க வலியுறுத்தி வருவதாகவும் Lords amendment 3, from Lord Alton, Lords amendment 2, from Lord Collins ஆகிய இரு திருத்தங்களே மேற்குறித்த நாடுகளுடன் பிரித்தானிய அரசின் வர்த்தக நடவடிக்கைகளை வரையறுக்க வழிகோலும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய இலங்கை நிலைப்பாடு தொடர்பில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட “நீதி வழங்கும் முயற்சிகள் கைவிடப்பட்டு உயரதிகாரிகள் கடந்த கால குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்து வருவதால் இலங்கை கடந்த காலத்தைப் பற்றி மறுக்கும் நிலையில் உள்ளதுடன் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை மற்றும் எதிர்கால உரிமை மீறல்களிற்கான அபாயத்தின் முன்னெச்சரிக்கை அறிகுறிகளை குறித்து நிற்பதால் இதனை தடுக்கும் வலுவான நடவடிக்கைகளிற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது”என்பதனையும் அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த திருமதி அம்பிகை செல்வகுமார் “ஈழத்தமிழர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அனைத்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பிரபுக்கள் சபை உறுப்பினர்களையும் (House of Lords) மேற்படி திருத்தங்களிற்கான ஆதரவினை வழங்க வைப்பதன் மூலம் இந்த திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டுவந்து, இலங்கை போன்ற இனப்படுகொலை புரியும் நாடுகளுடனான வியாபார ஒப்பந்தங்களை தடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ICPPG அமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளரான திருமதி நிலானி கிரிஸ்டி காண்டீபன் கருத்து தெரிவிக்கும் போது, தாங்கள் வேண்டுகோள் விடுப்பதைப்போல, ஏனைய தமிழ் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும குறிப்பிட்டார்.