பிரித்தானியாவின் தீர்மானம் தோல்வியான தீர்மானம் – லிபரல் டெமோக்கிரட்டிக் கட்சி தலைவர்

பிரித்தானியாவின் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் பரிந்துரைகளை உள்ளடக்கவில்லை என்பதுடன், காத்திரமான தாகவும் இல்லை எனவே அது தோல்வியான தீர்மானம் என பிரித்தானியாவின் லிபரல் டெமோக்கிரட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் தலைவருமான எட் டெவி அவர்கள் பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு இன்று (11) எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக காத்திரமான விசாரணை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள பல தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

எனவே இணைக்குழு நாடுகள் உடனடியாக மீண்டும் கூடி பின்வரும் சரத்துக்களை உள்ளடக்கியதாக தீர்மானம் மீண்டும் எழுதப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு சிறீலங்கா பாரப்படுத்தப்பட வேண்டும்.

ஆதாரங்களின் அடிப்படையில் சிறீலங்கா மீது காத்திரமான அனைத்துலக விசாரணை பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகள் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும். குறிப்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை.

சிறீலங்காவில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் கடிதத்தை நீங்கள் கீழ் உள்ள இணைப்பில் பார்க்கலாம்.

Letter from Ed Davey MP 11.03.21 (1)