Tamil News
Home உலகச் செய்திகள் பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் வைரசினால் பாதிப்பு

பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் வைரசினால் பாதிப்பு

உலகில் உள்ள 112 மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் தப்பவில்லை.

பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் நடீன் டொறீஸ் கோவிட்-19 வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் சுயமாக தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் நேற்று (10) இரவு பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் பிரித்தானியா பிரதமர் வழங்கிய விருந்துபசாரத்தில் கடந்த வாரம் கலந்துகொண்ட டொறீஸ் நூற்றுக்கணக்கான மக்களை சந்தித்திருந்ததால் அவர்களும் நோயினால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஐக்கிய இராஜ்ஜியத்தில் 6 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மேலும், 382 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

இங்கிலாந்தில் 324 பேரும், ஸ்காட்லாந்தில் 27 பேரும், வடக்கு அயர்லாந்தில் 16 பேரும், வேல்ஸில் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் சுகாதார முகமை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இத்தாலி முற்று முழுதாக உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 631 பேர் மரணமடைந்துள்ளதுடன், 10,149 பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளில் இதுவரை 4000 இற்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதுடன், 113,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 64,000 குணமடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version