பிரித்தானியாவின் இரு தேசம் கொள்கை – தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களித்த ஐ.தே.காவும் எதிர்ப்பு

பிரித்தானியாவின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றான கொன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சிறீலங்கா பிரச்சனை தொடர்பில் இரு தேசம் என்ற சொற்பதம் இருப்பது கண்டிக்கத்தக்கது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சி அமைப்பாளருமான நவீன் திஸநாயக்கா தெரிவித்துள்ளதாவது:
பிரித்தானியா கென்சவேட்டிவ் கட்சி அறிக்கையில் உள்ள சொற்பதத்தை நீக்க வேண்டும். நாம் இந்த தேர்தல் அறிக்கையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

1980 களில் ஆஜன்ரீனாவுக்கு எதிராக பிரித்தானியா போர் தொடுத்த போது சிறீலங்கா பிரித்தானியாவையே ஆதரித்தது. அதனை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

சுவிற்சலாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கிதையும் நாம் எதிர்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த அரச தலைவர் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தமிழத் தேசியக் கூட்டமைப்பு வேண்டிக்கொண்டதும், தமிழ் மக்கள் சிங்களத் தலைவருக்கு வாக்களித்ததும் வரலாற்றில் இடம்பெற்ற தவறாகும் என்பதை ஐ.தே.க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.