பிரிட்டனில் கொன்சவேட்டிவ் கட்சி வெற்றி பெற்றால், தமிழீழம் மலருமா?

எதிர்வரும் 12ஆம் திகதி பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியான கொன்சவேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த 25ஆம் திகதி வெளியிட்டது. இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

அந்த தேர்தல் விஞ்ஞாபனம் 64 பக்கங்களைக் கொண்டிருந்தது. அதில் 59ஆவது பக்கத்தில் இலங்கையில் இரண்டு அரசாங்கங்களை உருவாக்க அனுமதியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

53ஆவது பக்கத்தில் இலங்கையில் நிலவு் முரண்பாட்டு நிலைமைக்கு தீர்வு காண இரண்டு அரசாங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தையே வைத்தே அவர்கள் மக்கள் ஆதரவை கோரியுள்ளனர். இந்த கோரிக்கைக்கு அமைய பிரிட்டன் தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சி வெற்றி பெறுமிடத்து, அவர்களுக்கு இலங்யைில் தமிழ் ஈழம் ஒன்றை அமைப்பதற்கான சட்டரீதியான ஆணை கிடைக்கும்.

இப்படியான ஓர் நிலை ஏற்படுமிடத்து அவர்களால் தமிழீழத்திற்கான போராட்டத்தை ஆரம்பிக்க முடியும். இதற்கு ஐ.நா.வும் வாக்களிக்கும் சாத்தியங்களும் உண்டு.

உலகம் முழுவதும் நிலையான தன்மை, நல்லிணக்கம் மற்றும் நியாயத்தை நிலைநாட்ட தொடர்ந்து ஒத்தழைப்பு வழங்கப்படும். இது இலங்கை ஓர் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

ஆகவே இது தொடர்பாக இலங்கை அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை, தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அப்படியான வாசகங்கள் எதுவும் இல்லை என கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதியை அடைவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் எனவும், இரு மாநிலம் தொடர்பான கூற்று மத்திய கிழக்கு நாடுகளுடன் மட்டுமே தொடர்புடையது எனவும் கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.