பிரான்ஸ் தயாரிப்பு ரஃபேல் விமானங்கள் இந்தியா புறப்பட்டன

பிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் விமானங்கள் இன்று இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 5 விமானங்கள் புறப்பட்டன. இவை ஜுலை 29ஆம் திகதி இந்தியா வந்தடையும்.

2016ஆம் ஆண்டு பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்க 60,000 கோடியில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி 5 ரஃபேல் போர் விமானங்கள் 29ஆம் திகதி இந்தியா வந்தடையும் என்று இந்திய விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முதற்கட்டமாக பிரான்ஸிலிருந்து 5 ரஃபேல் விமானங்கள் இந்தியாவை நோக்கி புறப்பட்டன. எதிர்வரும் 29ஆம் திகதி ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை இவை வந்தடையும். அத்துடன் அன்றைய தினமே அவை இயக்கப்படும் என்றும் இந்த 5 ரஃபேல் விமானங்களில் 3 விமானங்களில் ஒரு இருக்கையும், 2 விமானங்களில் இரண்டு இருக்கைகளும் உள்ளன.

பிரான்ஸிலிருந்து புறப்படும் விமானங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பப்படும் என்றும் கூறப்படுகின்றது. இந்த விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்படுவது தற்போதைய தேவையாக உள்ளது என இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.