பிரான்ஸ் அரசிற்கு எதிராக ஈரானில் வலுக்கும் போராட்டம்

இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்த பிரான்ஸுக்கு எதிராக ஈரானில்   போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு பிரான்ஸ் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர்  படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே பொலிஸாரால் கொல்லப்பட்டார். அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில் மக்ரோன் மற்றும் பிரான்ஸ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள  பிரான்ஸ்  தூதரகத்தின் முன்  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ரெசா அலாவி கூறும்போது, “அவர்கள் தொடர்ந்து இதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டு இருந்தோம். ஆனால், இதுதான் அவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்குச் சரியான நேரம். இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து முஸ்லிகளும் ஒன்றுசேர வேண்டும்”  என்றார்.