பிரான்சின் நகரசபை ஒன்றில் தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான வித்திறி சூ சென் என்னும் நகரத்தில் 19.05.2021 தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 தமிழ் உணர்வாளர்கள் பலர் தமிழர் தமிழினப் பிரச்சினை பற்றியும், தமிழினத்திற்கு நடந்த இனப்படுகொலை பற்றியும் மாநகர முதல்வருக்கும் எதிர்கட்சியினருக்கும் இரண்டு கட்டமாக கடந்த நாட்களில் தெரியப்படுத்தியிருந்தனர்.

அதன் பலனாக நேற்று 19.05.2021 நள்ளிரவு வரை சென்ற அனைத்துக் கட்சிகளின் சந்திப்பில் திரு ரவ்பால் அவர்களால் தமிழ் மக்களின் நிலைப்பாடு விலாவாரியாக  எடுத்துக் கூறப்பட்டு, தீர்மானம் இனிதே நிறைவேற்றப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவாக கடந்த 17.05.2021 கொட்டும் மழைக்கு மத்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் இங்கு நடாத்தப்பட்டதும், இதில் துணை முதல்வர் கலந்து கொண்டு ஆதரவுக் குரல் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இதே போன்று 20.05.2021 இன்று மாலை 18.00 மணிக்கு நொய்சிலி செக் என்னும் இடத்தில் உள்ள மாநகரசபையில் இத்தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.   இங்கும் கடந்த 17.05.2021 கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றதும் அதில் மாநகர முதல்வர் கலந்து கொண்டு உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.