Tamil News
Home செய்திகள் பிரபாகரனின் வீரம் ஒரு இலட்சம் யானைகளுக்கு சமன் தமிழக சித்த மருத்துவர்

பிரபாகரனின் வீரம் ஒரு இலட்சம் யானைகளுக்கு சமன் தமிழக சித்த மருத்துவர்

தமிழகத்தில் இருந்து அண்மையில் பிரான்சிற்கு சென்ற சித்த மருத்துவர் திரு. எம்.ஏ.ஹூசைன் அவர்கள் தமது மருத்துவ மற்றும் வாழ்க்கைப் பயணம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி வழங்கும் போது,  விடுதலைப் புலிகளுடனான தனது உறவு பற்றியும் கூறியிருந்தார். அந்தப் பகுதியை இங்கே தருகின்றோம்.

கடந்த காலங்களில் தமிழீழத் தேசியத்திலும் உங்கள் பங்களிப்பு இருந்துள்ளதாக அறியமுடிகின்றது.  என்று  கேட்டதற்கு,

தாம்பரத்தில் இருந்து 13 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது படைபயின்ற ஊரு. அங்கே ஒரு படமாளிகையின் அருகே நான் மருத்துவமனை நடாத்திவந்தேன். அதனால் என்னை சினிமாக் கொட்டகை வைத்தியர் என்றுதான் எல்லோரும் அழைப்பர். நான் அங்கிருந்த போதும், அதற்கு முன்னரும் விடுதலைப் புலிகளோடு எனக்குத் தொடர்பு இருந்து வந்தது. விடுதலைப் புலிகளைச் சேர்ந்த ஒரு நாற்பது பேருக்குமேல் கனடா தேசத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

இது குற்றச்செயல் என்று என்னை இன்று கைது செய்தாலும் நான் செல்லத் தயாராக உள்ளேன். கனடாவிற்குச் சென்றால் அடி உதை இல்லாமல் அவர்கள் அங்கு நிம்மதியாக வாழ்வார்கள். அப்படியான பொது நோக்கத்துடனேயே அவர்களை அவ்வாறு அனுப்பி வைத்தேன்.

அது சட்டப்படிகுற்றம் என்பது எனக்குத் தெரியும். எந்தச் சட்டமும் வந்து ஒருவனைக் காப்பாற்றப்போவது கிடையாது. தர்மம் மட்டும் தான் காக்கும்.

அத்தோடு குண்டடிபட்டுக் காயமடைந்து வந்தவர்களுக்கு நானே குண்டை எடுத்து தையல் போட்டு குணப்படுத்தி, உணவு கொடுத்துப் பாதுகாத்து, ஈஞ்சப்பாக்கம் கொண்டு சென்று தோணியில் ஏற்றி விட்டுவிடுவேன். இப்படி ஐந்துபேரை அனுப்பியுள்ளேன். ஆனால், பிரபாகரனின் முகத்தை ஒரு தடவை கூட பார்த்ததில்லை. நான் ஈழத்துக்குச் சென்ற போதும் பார்க்க முடியவில்லை.

ஒரு முறை கேரளா திருவனந்தபுரத்தில் பேசும் போது எல்லோரின் முன்னிலையில் உலகத்திலே வீரன் என்று சொல்வதற்கு இரண்டுபேர் இருக்கின்றார்கள். ஒருவர் தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன், மற்றவர் கடாபி என்றேன்.

கடாபி என்று சொன்னதும் அங்கிருந்த இஸ்லாமியர்கள் கைதட்டினார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றதும் அனைவரின் முகமும் சுருங்கியது. ஏனென்றால் அங்கு ஒருவன்கூட தமிழன் இல்லை. அதுதான் காரணம். மலையாளக்காரன்கள் என்பதால் அவர்களுக்குத் தெரியவில்லை. உடனே என்னை பொலிஸார் பிடித்து விசாரித்தனர்.

நீ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவனா என்று மிரட்டினர். அதெல்லாம் கிடையாது. தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கு இருந்தாலும் வீரன்தான். இறந்தாலும் வீரன்தான். அவனுடைய வீரம் ஓர் இலட்சம் யானைகளுக்குச் சமம்.

நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்கள். அதற்குத் தண்டனை தந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்றேன். பின்னர் என்னை விடுவித்தார்கள்.

கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடியதாக உள்ளது. இதனால், மக்களும் மகிழ்ச்சியோடு உள்ளனர். அது எனக்கும் பெருமகிழ்ச்சி.

 

Exit mobile version